தமிழ்நாடு

tamil nadu

நக்கீரன் கோபால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Mar 29, 2019, 10:30 PM IST

கோவை: பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நக்கீரன் கோபால்


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் ஆதாரங்களை அழிக்க காவல்துறையினர் முயற்சி செய்வதாகவும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு மகன்களுக்கும், இவ்விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக நக்கீரன் இணையதளத்தில் வீடியோ செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, தன்னுடைய பெயருக்கும், குடும்பத்திற்கும் அவதூறை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் சிபிசிஐடி உத்தரவிட்டது.

இந்நிலையில், வரும் 30ஆம் தேதி கண்டிப்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நக்கீரன் கோபாலுக்கு கடந்த 26ஆம் தேதி கோவை சிபிசிஐடி அதிகாரிகளால் சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, நேரில் ஆஜராக வேண்டும் என்ற கோவை சிபிசிஐடி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நக்கீரன் கோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், நக்கீரன் இதழுக்கு கிடைத்த 2 சிடி (CD) ஆதாரங்கள் அடிப்படையில் தான் செய்தி வெளியிடப்பட்டது. அதனால், எப்படி ஆதாரங்கள் கிடைத்தது என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதிக்க கூடாது என்றும், மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டால் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் 1100 வீடியோக்கள் இருப்பதாக செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.வழக்கின் ஆவணங்கள், சாட்சிகள், விசாரணை அனைத்தும் பொள்ளாச்சியில் நடைபெறுவதால் விசாரணைக்கு உதவியாக கோவை சிபிசிஐடி காவல்துறை மனுதாரருக்கு சம்மன் அனுப்பியது . தற்போது வழக்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இடைபட்ட காலத்தில் ஆவணங்களை சேகரிக்க சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. வேறு எந்த உள்நோக்கம் இல்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால் சென்னையில் விசாரிக்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏப்ரல் 1ஆம் தேதி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக நக்கீரன் கோபால் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அவரை எந்த விதத்திலும் துன்புறுத்தக் கூடாது என்றும் மனுதாரர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் காவல்துறை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details