மரங்களை சேதபடுத்துவதைத் தடுக்க என்ன விதிமுறைகள்? உயர்நீதிமன்றம் கேள்வி - High Court
சென்னை: மரங்களில் பதாகைகள், ஆணி அடித்து சேதப்படுத்துவதைத் தடுக்க என்ன விதிமுறைகள் உள்ளது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை சிநேகம் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பொது இடங்களில் உள்ள மரங்களில் தங்கள் நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் வகையில் பல தனியார் நிறுவனங்கள், மரங்களில் பதாகைகளுக்காக ஆணி அடிப்பது, அலங்கார மின் விளக்குகள் பொருத்துவது போன்ற செயல்களால் மரங்கள் சேதமடைகிறது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் மரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலர், காவல்துறை ஆணையரிடம் கடந்த ஆண்டு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மரங்களில் பதாகைகள், ஆணி அடிப்பதைத் தவிர்க்க எந்த விதிமுறைகளும் இல்லை. தனியார், அரசு நிலங்களில் உள்ள மரங்களில் மின்விளக்குகள் அமைக்க சட்டப்படி அனுமதி இல்லை என்பதை அறிவுறுத்தல்களாக மட்டுமே தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2009பஞ்சாயத்து சட்டத்தின் படி மரங்கள் சேதப்படுத்துவதைத் தடுக்க சட்டம் உள்ளது. 2016இல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தமும் அதை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மரங்களில் பதாகைகள், ஆணி அடிப்பதைத் தவிர்க்க என்ன விதிமுறைகள் உள்ளது? விழா காலங்களில் மரங்களில் மின் விளக்குகள் அமைக்க யார் அனுமதி வழங்குகின்றனர்? மரங்கள் சேதப்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் மாநகராட்சி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.