தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் விவசாயத்துறையில் உள்ள பிரச்னைகள் - ஆய்வறிக்கை வெளியீடு - பொருளாதாரம்

சென்னை: தமிழ்நாட்டில் விவசாயத்துறைச் சந்தித்து வரும் பிரச்னைகள், இவற்றை சரி செய்வதற்கான தீர்வுகள் குறித்து நபார்டு வங்கி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

விவசாயத் துறை
விவசாயத் துறை

By

Published : Feb 25, 2020, 6:03 PM IST

தமிழக பொருளாதாரச் சூழல், வங்கிக் கடன் கிடைக்கும் விவரங்கள் தொடர்பாக நபார்டு என்று அழைக்கப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தனது ஆண்டு ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் விவசாயத்துறை சந்தித்து வரும் பிரச்னைகள் சிக்கல்கள் குறித்தும் இதனை சரி செய்வதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நபார்டு வங்கி வெளியிட்ட விவசாயத்துறை வளர்ச்சி விகிதம் பற்றிய அட்டவணை.

ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: " தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் விவசாயத்துறையின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது. மாநிலத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாயத் துறையின் பங்கு குறைந்து வருவது ஆபத்தானது.

2016- 17ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் விவசாயம், மீன்பிடித்தல், சுரங்கம் உள்ளிட்ட இயற்கை வளங்களை நம்பி செய்யப்படும் அடிப்படை தொழில்களின் அளவு 13 சதவிகிதமாக இருந்தது.

இதில் விவசாயத் துறையின் பங்கு 5.56 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. குறைந்து வரும் பரப்பளவு நகரமயமாதல், கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான நகரங்களுக்கு இடம்பெயர்வது, விவசாய நிலத்தை மற்ற வேலைகளுக்கு பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் விவசாயம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு குறைந்துவருகிறது.

2015- 16ஆம் ஆண்ட எடுக்கப்பட்ட வேளாண் கணக்கெடுப்பின்படி , 2011இல் 6,488 ஹெக்டேர் நிலம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2016இல் இது 5,971 ஹெக்டேராக குறைந்துள்ளது. விவசாயத்தில் ஏற்படும் பிரச்னைகளால், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றுவருகிறது.

பிரச்னைகள் என்ன:

ஏரி, குளங்களில் நீர் குறைவாக இருந்தது, எதிர்பார்த்த அளவு காவிரி நீர் கிடைக்காதது, பருவமழை பொய்த்துப் போனது. தீடீரென ஏற்பட்ட வறட்சி ஆகியன தமிழ்நாட்டில் விவசாயத்தைக் கடுமையாக பாதித்துள்ளது.

இவை தவிர்த்து, தேவையான அளவுக்கு உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், போதிய சேமிப்பு கிடங்கு வசதி இல்லாதது, குளிரூட்டப்பட்ட கிடங்கு இல்லாதது, உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாதது, சரியான வகையில் விளைபொருட்களை சந்தைப்படுத்தாதது ஆகிய பிரச்னைகளும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியில் தமிழ்நாடு பங்கு 3 சதவிகிதமாக உள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய அரிசி உற்பத்தி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பல்வேறு விளைபொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளபோதும், இவையெல்லாம் விரைவில் கெட்டுப்போகும் தன்மையுடைய பொருட்களாக உள்ள காரணத்தினாலும், மாநிலத்தில் போதிய சேமிப்பு வசதிகள் இல்லாததாலும் அவற்றை முறையாக சந்தைக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் விளையும் 35 சதவிகித காய்கறிகள், பழங்கள் போக்குவரத்து, சேமிப்பில் அழுகிவிடுகிறது. மாநிலத்தில் விளையும் பொருட்களில் வெறும் 4.6 சதவிகித பொருட்கள்தான் பதப்படுத்தப்படுகிறது.

தீர்வு என்ன:

நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்துவது, தேவையை அறிந்து குறைவான அளவு உரங்களை பயன்படுத்துவது, விவசாய பொருட்களை சந்தைப்படுத்த அரசின் இணைய கொள்முதல் நிலையமான இ-நாம்- ஐ பயன்படுத்துவது, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

ஓரே பொருளை மட்டும் பயிரிடாமல் வெவ்வேறு பொருட்களை கலந்து பயிரிடுவது, விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பது, மீன் பிடிப்பது போன்ற விவசாயத்துக்குத் துணையான வேலைகளில் ஈடுபடுவது, விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், விவசாய கூட்டமைப்புகளை உருவாக்குவது, இயற்கை சீற்றங்களால் திடீரென பயிர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க பயிர்காப்பீடு செய்வது, விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் கடன் கொடுப்பவர்களை முறைப்படுத்துவது.

விவசாயகளுக்கு நிதி ஆதாரத்தை கையாள பயிற்சி அளிப்பது, பாசனம் உள்ளிட்டவற்றில் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகள் பயன்படுத்த ஊக்குவிப்பது, விஞ்ஞான ரீதியிலான சேமிப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என நபார்டு ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க விவசாயிகளின் வருமானத்தை இரடிப்பாகப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்துள்ளது. இதனை சாத்தியப்படுத்த அரசு விவசாய துறையில் சிறப்பு கவனம் எடுத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முதலில், விவசாயிகளுக்கு தேவையான பாசன வசதியை உருவாக்க வேண்டும்.

அறுவடை செய்யப்பட்ட பயிர்களை சேமிக்க கிடங்குகளை உருவாக்க வேண்டும். அவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல சாலை போக்குவரத்து வசதி, இணைதளத்தில் சந்தைப்படுத்தும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

பயிர்கடன்கள் மடைமாற்றம் விவசாயத்துக்கான போதிய கடன் வசதி கிடைப்பதில் சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், விவசாயக் கடன் வாங்கி அவற்றை கல்வி, வீடு கட்டுவது, பொருட்கள் வாங்குவது ஆகிய வேலைகளுக்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

பயிர்கடன்களுக்கு அடமானம் வைக்க தேவையில்லை. வட்டித் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் பயிர் கடன் பெற்று மற்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயிர்கடன்களை கிசான் கிரெடிட் கார்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நபார்டு வங்கி தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details