சென்னை: நபார்டு எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி, வழங்கிய கடனுதவி கடந்த நிதியாண்டில் 87 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தன் தலைமை பொது மேலாளர் கூறினார்.
கிராமப்புற மேம்பாட்டு வங்கியான தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) பல வணிக, ஊக்குவிப்பு, நிறுவன மேம்பாடு திட்டங்களுக்கு மறுநிதியளித்து (Refinancing) வருகிறது. 2020-21 நிதியாண்டில் நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தால் வழங்கப்பட்ட கடனுதவி குறித்து இன்று அதன் தலைமை பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்திப்பேசினார். அப்போது அவர், "நபார்டு வங்கி முன் எப்போதும் இல்லாத அளவாக கடந்த நிதியாண்டு ரூ.27,104 கோடி கடன் வழங்கியுள்ளது. இது சென்ற வழங்கப்பட்ட 14,458 கோடி ரூபாயை விட 87 விழுக்காடு அதிகம் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாநிலத்தில் உள்ள தகுதியான நிதி நிறுவனங்களுக்கு மூலதன உருவாக்கத்திற்கான நீண்ட கால கடன்கள் மற்றும் உற்பத்திக்கான குறுகிய கால கடன்கள் ஆகியவற்றின் கீழ் மொத்த மறுநிதியளிப்பு 23,062 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 89 விழுக்காடு வளர்ச்சியாகும். நீண்டகால மறுநிதியளிப்பு 11,698 கோடி ரூபாயும், குறுகிய கால கடனாக 11,364 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிகளுக்கு 8761 கோடி ரூபாய் மறுநிதியளிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். நபார்டு வங்கியின் மறுநிதியளிப்பு சென்ற ஆண்டை விட 128 விழுக்காடு அதிகமாகும். மொத்த மறுநிதியளிப்பில் கூட்டுறவு வங்கிகளின் பங்கு 8761 கோடி ரூபாயாகவும், (38.5%), வணிக வங்கிகள் பங்கு 6602 கோடி ரூபாயாகவும் (29%), மண்டல ஊரக வங்கிகளின் பங்கு 4840 கோடி ரூபாயாகவும் (21 %) மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 2858 கோடி ரூபாயாகவும் (12%) பங்களிக்கின்றன.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக மாநில அரசுகளுக்கும், அரசு சார் நிறுவனங்களுக்கும் நபார்டு வங்கி கடனுதவி வழங்குகிறது. கடந்த நிதியாண்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் பல்வேறு புதுமையான திட்டங்களை செயல்படுத்துவது, விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, விவசாயம் சார்ந்த தொழில் தொடங்குபவர்களுக்கு உதவி, பழங்குடி இன மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நபார்டு வங்கி 31 கோடி ரூபாய் இலவச நிதி உதவி வழங்கியுள்ளது.
இதுதவிர, விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தி நிறுவனங்களை உருவாக்குவதிலும் நபார்டு வங்கி கவனம் செலுத்தி வருகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி: எஸ்பிஐ வங்கி கிளை மூடல்