நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
'கொடிய கரோனோ பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நோய்த்தாக்கம் அதிகரித்துவரும் இவ்வேளையில், தமிழ்நாடு அரசு மது கடைகளைத் திறப்பதால், இந்த நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே, மது கடைகளைத் திறக்கக்கூடாது என்று நாடு முழுக்க சமூக ஆர்வலர்களும், அனைத்து அரசியல் அமைப்புகளும் குரலெழுப்பி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் மது கடைகளைத் திறக்கக்கூடாது என்று அரசுக்கு நேற்று கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் மது கடைகளைத் திறக்கும் தமிழ்நாடு அரசின் முடிவைக் கைவிடக்கோரி ஈரோடு மாநகராட்சி எஸ்.எஸ்.பி நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின், ஈரோடு மேற்கு தொகுதி பொறுப்பாளர் தம்பி தமிழ்ச்செல்வன் தனது குடும்பத்தினருடன் கரோனா தடுப்பு விதிகளை முறையாகக் கடைபிடித்து, அமைதியாக, வீட்டுக்கு வெளியில் பதாகை ஏந்தி அறவழியில் எளிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவர்களை ஈரோடு மாநகரக் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி வருவதாகவும், கொடும் சட்டப்பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க இருப்பதாகவும் வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.
ஜனநாயக நாட்டில் மக்கள் நலனுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அறவழியில் போராட்டம் நடத்துவதும், எதிர்ப்பினை பதிவு செய்வதும் போன்ற செயல்கள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளாகும்.