தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மின்சாரச் சட்டத்திருத்தம் - 2020... மாநில இறையாண்மைக்கு எதிரானது'

சென்னை: மாநில இறையாண்மைக்கு எதிரான மின்சாரச் சட்டத்திருத்தம் 2020-ஐ உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சி சீமான்  சீமான் தேசத் துரோக வழக்கு  Naam tamizhar seeman  Electricity Act against State Sovereignty  மின்சாரச் சட்டத்திருத்தம்  உதய் மின் திட்டம்  தமிழ்நாடு மின்சார வாரியம்  மின்சாரச் சட்டத்திருத்தம் நாம் தமிழர் கட்சி அறிக்கை  seeman statment on Amendment of Electricity Act
மின்சாரச் சட்டத்திருத்தம் - 2020: மாநில இறையாண்மைக்கு எதிரானது

By

Published : May 10, 2020, 2:15 PM IST

Updated : May 10, 2020, 2:52 PM IST

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனோ நோய்த்தொற்று பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்நெருக்கடியான காலக்கட்டத்தில் மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொடர்ச்சியான எதேச்சதிகாரச் செயல்பாடுகள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது.

மாநில உரிமை பறிப்பின் நீட்சியாக தற்போது மின்சாரத்துறையின் மீது கை வைத்துள்ளது மத்திய அரசு. கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரசு அரசு மெல்ல மெல்ல செய்த மாநிலங்களின் அதிகாரப்பறிப்பை, பாஜக அரசு மிக வேகமாக செய்து வருகின்றது. அதுவும், இந்த ஊரடங்குக் காலத்தில் மக்கள் கவனமெல்லாம் நோய்த்தொற்று பரவல் நோக்கி இருப்பதைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, திரைமறைவில் அதிகாரக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

தன்னாட்சி அமைப்புகளாக இருந்த நதிநீர் ஆணையங்களை மத்திய புனலாற்றல் ( ஜல்சக்தி) அமைச்சகத்தின் கீழ் கொண்டுசெல்ல முடிவெடுத்ததுபோல, தற்போது தன்னாட்சி அமைப்பாகவுள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினையும் தன்வயப்படுத்த முனைவது முழுக்க முழுக்க மாநில உரிமைப் பறிப்பாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி, மின்சாரம், சுகாதாரம், வேளாண்மை இவையெல்லாம் மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்குமான பொதுப்பட்டியலில் உள்ளது. ஆனால் மாநிலப்பட்டியலிலுள்ள கல்வியை எப்படிப் பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்று பின், ‘நீட்’ உள்ளிட்டத் தேர்வுகள் மூலம் மாநில அதிகாரங்களுக்கு அப்பால் மத்திய அரசின் கண் அசைவுக்கு கல்வி உரிமை போய்ச் சேர்ந்ததோ, அப்படியே மாநிலங்களிடம் இருந்த மின்சாரம் மீதான உரிமைகளை 2003 ஆம் ஆண்டு அன்றைய பாஜக- திமுக கூட்டணி அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பிடம் அளித்தது.

இதன்மூலம், மின்சாரக் கட்டண உயர்வுகளை மாநில அரசு அனுமதி இல்லாமல் அந்த ஆணையமே நேரடியாக செய்துகொள்ள இயலும். தற்போது அந்த ஒழுங்குமுறை ஆணையத்தையும் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வது என்பது எஞ்சியுள்ள மாநில உரிமைகளையும் மொத்தமாகப் பறிக்கும் செயலேயன்றி வேறில்லை. இனி பொதுப்பட்டியலில் மாநில உரிமைகள் என்பது கானல்நீராக மட்டுமே இருக்கும்.

தமிழ்நாட்டில் பொதுவிநியோக முறையை, ‘ஒரே நாடு! ஒரே அட்டை’ என்ற திட்டத்தின் மூலம் எப்படி சீர்குலைக்க முயன்றதோ அப்படியே தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையிலுள்ள சேவை அடிப்படையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரங்களைப் பறித்து அவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதற்கான முதல்படிதான் ஒழுங்குமுறை ஆணையத்தை தன்வயப்படுத்தும் இந்த புதிய சட்டத்திருத்தம்.

இதன் மூலம் மின்சாரம் சேவை என்பதிலிருந்து மாறி வணிகம் என்ற ரீதியில் அதுவும், தான் விரும்பிய தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவைகளே கொள்முதல், விற்பனை, பகிர்மானம், விலைநிர்ணயம் அனைத்தையும் தீர்மானிக்கும் நிலை உருவாகும். இனி உற்பத்தி உள்ளிட்ட மின்சாரம் மீதான மாநில அரசுகளின் அனைத்து உரிமைகளும் அடியோடு பறிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், பொதுமக்களுக்கு, தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் குறைந்த விலை மின்சாரம் உள்ளிட்ட அனைத்துவகை உரிமைகளும் இனி மெல்லக் காற்றில் பறக்கவிடப்படும் பேராபத்து இந்த சட்டத்திருத்தம் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்திற்கான விலைநிர்ணயத்தை மத்திய அரசின் அலுவலர்களே முடிவெடுப்பார்கள் என்ற திருத்தமானது, தனியார் நிறுவனங்களுக்கு சாதகமானது மட்டுமன்றி மின்சாரம் கொள்முதல் முடிவுகளில் மாநில அரசுகளின் அதிகாரங்களை முற்றிலுமாக பறிக்கும் செயலாகும்.

2016 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டப் பிறகு அவசர அவரசமாக உதய் மின்திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டதன் விளைவுதான் இது. இதற்குமுன், மூன்று முறை இத்தகையச் சட்டத்திருத்தங்களை கொண்டுவந்து நிறைவேற்ற முடியாமல் போனதால், தற்போது ஊரடங்கு காலத்தில் எவ்வித எதிர்ப் போராட்டங்களையும் நடத்தவியலாது என்று நினைத்து மத்திய பாஜக அரசு மீண்டும் அந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர துடிக்கிறது.

எனவே, இவை விவசாயிகள், நெசவாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் என்பதால் மத்திய அரசு இந்த சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும்வரை உடனடியாக அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என அழைக்கிறேன். மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆளும் அதிமுக அரசு எவ்வகையிலும் துணைபோகாமல் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கும் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாகக் கைவிட்டு மாநில இறையாண்மைக்கு எதிராக உள்ள மின்சாரச் சட்டத்திருத்தம்-2020ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’சேவைத் துறையாக இருந்து வரும் மின்துறை, வர்த்தகத் துறையாகிவிடும்’ - வேல்முருகன்

Last Updated : May 10, 2020, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details