'வெற்றியோ, தோல்வியோ சண்டை செய்யனும்' என்ற வசனத்துக்கு ஏற்ப நடைபெறும் அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவது நாம் தமிழர் கட்சியின் வழக்கம். அந்த வகையில் நடந்து முடிந்த மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
அதைத்தொடர்ந்து அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் வழக்கம்போல நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் பதிவான 1,88,659 வாக்குகளில் நாதக சார்பில் போட்டியிட்ட கந்தசாமி 2,913 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதேபோல், நாங்குநேரி தொகுதியிலும் மொத்தம் பதிவான 1,70,624 வாக்குகளில் ராஜநாராயணனால் 2,662 வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது.
நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் மொத்தம் 3.99 வாக்கு சதவிகிதத்தைப் பெற்றிருந்தது. அதில் விக்கிரவாண்டியை உள்ளடக்கிய விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 24,609 வாக்குகளும், நாங்குநேரியை உள்ளடக்கிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 49,898 வாக்குகளும் பெற்றிருந்தது. இதன்மூலம் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறலாம் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்தபோது இரண்டு தொகுதிகளிலும் தலா 1.5 சதவிகித வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றுள்ளது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இது குறைவில்லை என்றாலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகளை வைத்துப் பார்க்கும்போது, இத்தேர்தல் முடிவுகள் தம்பிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. மேலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.