சென்னை:அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பில் 212 இடங்கள் உள்ள நிலையில், 47 பேர் மட்டுமே தகுதி பெற்றிருப்பதால் விண்ணப்பித்த அனைவரும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர்.
தேசிய மருத்துவ ஆணையத்தினால் 93 மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்ட நிலையில், 94 மதிப்பெண் பெற்ற மாணவி காளீஸ்வரி, கார்த்திகா ஆகியோரும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு, இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கீழாநிலைக்கோட்டையைச் சேர்ந்த தனபால் அமுதாவின் மகள் நவதாரணி. வளர்ச்சிக்குன்றிய மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். இவர் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு, நீட் தேர்வில் 102 மதிப்பெண்கள் பெற்று, மதுரை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
தனக்கு உயரம் என்பது குறையாக கருதாமல் தொடர்ந்து படித்து, உயரத்தைக் காரணம் காட்டி மற்றவர்கள் குறைவாகப் பேசும்போதும், அதனைப் பொருட்படுத்தாமல் சாதனைப்புரிந்துள்ளார்.
மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர உள்ள நவதாரணி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ”சிறுவயது முதல் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்தது. நான் உயரம் குறைவாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் 12ஆம் வகுப்பு முடித்து, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டில் மதுரை மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுள்ளேன். என்னை மாற்றுத்திறனாளி என அழைப்பதை விரும்பமாட்டேன்.
பேட்மிண்டன், ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் தேசிய அளவில் விளையாடியுள்ளேன். எம்பிபிஎஸ் படித்து முடித்த பின்னர், நரம்பியல் சிறப்பு மருத்துவம் படித்து தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என எண்ணுகிறேன்” எனத் தெரிவித்தார்.
'சாதிக்க எதுவும் தடையில்லை...!' - மருத்துவ மாணவி நவதாரணி இதுகுறித்து மாணவி நவதாரணியின் அம்மா அமுதா கூறுகையில், ”எனக்கு 2 குழந்தைகள். நவதாரணி மூத்தப்பெண், ஒரு பையன் உள்ளனர். இவர்கள் உயரம் குறைவாக இருப்பதால் எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டுதான் செல்வேன். இவர்களைப் படிக்க வைத்து சாதிக்க வைக்க வேண்டும் என விரும்பினேன். அதேபோல் எனது மகள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம்; இ.பி.எஸ் உட்பட 750 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு...