சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் பாராட்டு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உச்ச நீதிமன்றத்தின் கிளையைத் தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும் எளிதில் தீர்வு காணக்கூடியவர் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் எனப் பாராட்டு தெரிவித்தார்.
பார் கவுன்சில் உறுப்பினரான ஆர்.விடுதலை பேசியபோது, "சுற்றுச்சூழல் பாதுகாப்பின் காவலர் என அனைவராலும் போற்றப்பட்டவர் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்" என்றார்.
இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் பேசியபோது, "சச்சினும், கோலியும் சேர்ந்த ஒரு மனிதராக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வழக்குகளை கையாண்டார். நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பார் கவுன்சில் எப்போதும் தயங்காது" என உறுதியளித்தார்.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் பேசியதாவது, "வழக்கறிஞர் சமூகம் கற்று தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பல்வேறு தீர்ப்புகளை வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன், கூடுதல் நீதிபதியாக பதவியேற்றவுடன் நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் இருந்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது" என்றார்.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பேசியபோது, "இளம் நீதிபதிகளுக்கு கற்றுக்கொடுப்பதுடன், தீர்ப்புகள் எழுதவும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஊக்குவித்தார். MMS என்பதை Man of Marvelous Sundresh என்பது தான் சரியாக இருக்கும்" என்றார்.
நீதிபதி என்.சேஷசாயி பேசியபோது, "பின் வாசல் வழியாக வந்த ஆங்கிலம், முன் வாசலில் தமிழை மறக்கத் தொடங்கிவிட்டது. பதவி என்னும் உடையை மாட்டிக்கொண்டு கழற்ற மறுப்பவர்கள் உள்ள நிலையில், அந்த உடையை அணிந்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாதவர் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்" என்றார்.