சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை ஒட்டி இசையமைப்பாளர் பரத்வாஜ் எஸ்பிபி குறித்த தனது அனுபவங்களை ஈடிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "எந்த இசை அமைப்பாளராக இருந்தாலும் பாடகர் என்பவர் மிகவும் முக்கியமானவர். சாதாரண பாடலை கூட மிகப் பெரிய பாடலாக மாற்றும் திறமை படைத்தவர் எஸ்பிபி. அந்த பாடலை அழகுபடுத்தி அதற்குத் தகுந்தார் போல் பாவனைகள் கொடுத்துப் பாடலை சிறப்பாக்கி விடுவார்.
பின்னணி பாடகர்களுக்கு ரோல் மாடல் அவர்தான். அவர் பாடிய நிறையப் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன். அனைத்துப் பாடல்களும் ஹிட். நான் சினிமாவிற்கு அறிமுகமாகாத காலத்தில் இருந்து அவரை எனக்குத் தெரியும். என்னுடைய பாடல் பயணத்தில் அவர் ஒரு முக்கியமான புள்ளி. இந்த தருணத்தில் அவரைப் பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்.
1993ம் ஆண்டு நான் முதன்முதலாக ரெக்கார்ட் செய்த டூயட் பாட்டு 'பொன்னான காலம் வந்தாச்சு' என்ற பாடலை சித்ராவுடன் இணைந்து பாடினார். ஆனால் அப்படம் பாதியில் நின்று போனது. அதன் பிறகு நடிகர் அஜித்தின் 'காதல் மன்னன்' படத்தில் 'உன்னைப் பார்த்த பின்பு நான்' என்ற பாடலை பாடினார். இப்பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது வரையிலும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல பாடல்கள் எனது இசையில் பாடியுள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியே ஆகணும்.