சென்னை: திரையுலகில் நடிகர்கள், நடிகைகளுக்கு இணையான மவுசு இசை அமைப்பாளர்களுக்கும் உண்டு. குறிப்பாக இந்திய சினிமாவை பொருத்த வரையில், திரைப்பட கதைகளுக்கு நிகரான இடத்தை பாடல்களும் பெற்றுள்ளது. அந்த வகையில் தனது இசையாளும், பாடலாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.
இவரது இசை வயது வரம்பற்று அனைவரையும் கவர்ந்த ஒன்று. இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் "மறக்குமா நெஞ்சம்" என்ற பெயரில் சென்னையில் நேற்று (செப். 10) இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து டிக்கெட் (Ticket) பெற்ற ரசிகர்கள், அதை அனுபவிக்க முடியாமல் மோசமான அனுபவத்தை சந்தித்து உள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இசை மழையில் நனைய நேற்று (செப். 10) மாலை வீட்டை விட்டு கிளம்பிய ரசிகர்கள், இசை கச்சேரி நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலினால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் டிக்கெட் வாங்கி நிலையிலும், ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
மேலும் இசையை ரசிக்க வந்த ரசிகர்கள் மிகவும் மோசமான அனுபவத்தை பெற்றதாக கூறி வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகள் பற்றி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சமூக வலைதளங்களில் ஹேஷ்டெக் ஏஆர் ரகுமான் (#ARRahman) என்ற பெயர் ட்ரெண்ட் (Trend) ஆகி வருகிறது. அதைத் தொடர்ந்து பெண்கள் பலரும், பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கிய தங்களின் உயிர் போயிருக்கும் என்பது போல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
மேலும், சென்னை ஓ.எம்.ஆர். சாலை என்பது சாதாரணமாகவே ட்ராபிக் (Traffic) அதிகம் உள்ள சாலை. இதனால், ஏற்கனவே இந்த பகுதியில் டிராபிக் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் என சென்னை போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தொடர்ந்து, ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரியை வி.வி.ஐ.பிக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்றும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய சாமானிய மக்கள் எப்படி சிரமப்படுகிறார்கள் என்றும் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் சென்னை வாசிகளுக்கு இந்த சண்டே (Sunday) மறக்கவே முடியாத ஞாயிறுக்கிழமை இரவாக மாறி விட்டது என்பது தான் சோகம்.
இதையும் படிங்க:"மகளிர் உரிமைத் தொகையால் எங்களுக்குத் தான் பிரச்சினை"- திடீர் போர்க் கொடி தூக்கிய வருவாய்த்துறை.. என்ன காரணம்?