சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்காக திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னைக்கு வர காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி அவரது மனைவி நளினி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை உச்ச நீதிமன்றம் கடந்த (2022) ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை வழங்கி தீர்ப்பளித்தது. இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற முருகன் மட்டும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் முருகன் சார்பில், அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் சொந்த நாட்டிற்குச் செல்லும் வரை வெளியே செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும், உயர் பாதுகாப்பு சிறைகளை விட முகாமில் நிலைமைகள் மற்றும் சூழ்நிலைகள் கடுமையாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: "தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் எஸ்சி-எஸ்டி மாணவர்களிடம் வைப்புத்தொகை வசூலிக்க வேண்டாம்" - ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர்!
மேலும் லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் முருகனுடைய சொந்த நாடான இலங்கையில் அவரது உயிருக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாததாலும் அங்கு செல்ல முடியாது என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சர்வதேச பாஸ்போர்ட்டை பெறுவதற்கு சிறப்பு முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்குச் செல்வதற்காக தன் கணவர் முருகனுக்கு அனுமதியும், சென்று வர, தன் கணவர் முருகனுக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்க தமிழக அரசிற்கும், வெளிநாட்டினர் பதிவு மண்டல அலுவலருக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
வழக்கானது நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க வேண்டுமா? அல்லது தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா? என தலைமை நீதிபதியின் உத்தரவை பெறும்படி நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு