தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடம்பர கொள்ளையனின் ஆட்டத்தை முடித்த காவல் துறை - யார் இந்த நீராவி முருகன்? - ஆடம்பர கொள்ளையன்

தமிழ்நாட்டையே கலக்கி வந்த பிரபல கொள்ளையன் நீராவி முருகன் நேற்று (மார்ச் 16) நெல்லையில் திண்டுக்கல் ஏடிஎஸ்பி லாவண்யா தலைமையிலான தனிப்படை காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். யார் இந்த கொள்ளையன்? விரிவாக பார்க்கலாம்.

நீராவி முருகன் என்கவுண்டர்
நீராவி முருகன் என்கவுண்டர்

By

Published : Mar 17, 2022, 9:34 AM IST

சென்னை:நீராவி முருகன் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நீராவி பகுதியில் வசித்து வந்ததால் நீராவி என தனது பெயருக்கு முன்பு சேர்த்து வலம் வந்தார். 12 வயது முதலே சிறு சிறு குற்றங்களில் நீராவி முருகன் ஈடுபட்டு வந்ததால் குடும்பத்தினர் இவரை ஒதுக்கியதால், முழுமையாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

1990ஆம் ஆண்டு தூத்துக்குடியில் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்ட நீராவி முருகன், தொழிற்போட்டி காரணமாக எதிர்கோஷ்டியினரை தீர்த்து கட்டி ரவுடியாக உருமாறினார். 2002ஆம் ஆண்டிற்கு பிறகு வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு நீராவி முருகன் காவல் துறைக்கு சவால் விடும் கொள்ளையனாக மாறினார்.

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவை கொலை செய்த சம்பவத்தில் கூலிப்படையுடன் தன்னை இணைத்து காவல் துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கூட்டாளியுடன் ஏற்பட்ட பங்கு தகராறில் நீராவி முருகன் தனது முதல் கொலையை நேரடியாக செய்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு, பின்பு ஆந்திராவில் பதுங்கி கொள்வது நீராவி முருகனின் தனி ஸ்டைல்.

காவல் துறையிடம் சிக்காமல் இருக்க ஒரே கூட்டாளியுடன் கொள்ளையில் ஈடுபடாமல் பல நபர்களுடன் சேர்ந்து நீராவி முருகன் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். அதில் அதிக பணத்தை சம்பாதித்து ஆடம்பர கொள்ளையனாக மாறினார். சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் வெளியே வந்து ஆடம்பர வாழ்க்கை, போதைக்காக பெண்களை குறிவைத்து தாக்கி வழிப்பறி செய்யும் பாணியை கையாள தொடங்கியது காவல் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீராவி முருகன்

தனியாக சாலையில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளான். கொள்ளையடிக்கும் பணத்தில் ஆடம்பர உடைகள் அணிந்து உல்லாசமான வாழ்க்கை வாழ்வதை நீராவி முருகன் பொழுதுபோக்கு போல ஈடுபட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை துரைப்பாக்கத்தில் ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி 14 சவரன் நகை பறிப்பில் நீராவி முருகன் ஈடுபட்ட போது, அதை கல்லூரி மாணவி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் ஸ்டைல் மற்றும் முக அடையாளங்களை வைத்து காவல் துறையினரிடம் சிக்க வாய்ப்பிருந்ததால் நீராவி முருகன் மொட்டை போட்டு அடையாளத்தை மாற்றி கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். 2014-15ஆம் ஆண்டுகளில் சென்னை புறநகர் பகுதி மக்களை பீதியில் உள்ளாக்கிய கொள்ளையனாக மாறியதாக நீராவி முருகன் பற்றி காவல் துறை தெரிவிக்கின்றனர்.

நீராவி முருகன் என்கவுண்டர்

நீராவி முருகன் மீது மூன்று கொலை வழக்குகளும், சென்னையில் வளசரவாக்கம், ஆதம்பாக்கம் காவல் நிலையங்களில் ஐந்து வழக்குகளும், தூத்துக்குடி, திருச்சி உள்பட பல மாவட்டங்களில் 37க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு முறையும் நீராவி முருகனை கைது செய்வதில் காவல் துறைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.செல்ஃபோன், சிம் என அனைத்தையும் உடனடியாக மாற்றிக் கொண்டு தலைமறைவாக நீராவி முருகன் இருப்பதால் சற்று கடினமாகவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு வந்துள்ளார்.

என்கவுண்டர் செய்யப்பட்ட பகுதி

பல முறை நீராவி முருகன் கைதாகி இரு முறை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த போதிலும் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆடம்பர கொள்ளையன் நீராவி முருகன் தற்போது என்கவுண்டருக்கு இரையாகியுள்ளார்.

இதையும் படிங்க:தற்காப்புக்காகவே என்கவுன்ட்டர்; ரவுடிகள் கைது தொடரும் - தென் மண்டல ஜஜி

ABOUT THE AUTHOR

...view details