சென்னை: சென்னை மந்தைவெளி பகுதியைச்சேர்ந்த தினேஷ்(40) என்பவர், ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை நடத்தி வருகிறார். ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனம், கடந்த 14ஆம் தேதி காணாமல் போனது.
இதுதொடர்பாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
அந்த சிசிடிவி காட்சி மற்றும் மாயமான இருசக்கர வாகனத்தின் புகைப்படத்தை தனது வியாபார ரீதியிலான வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த தினேஷ், தனது வாகனம் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி கோரியிருந்தார்.
இந்த பதிவைக் கண்ட சிலர், தினேஷின் வாகனம் நெற்குன்றம் அண்ணாநகர் பகுதிகளில் தென்பட்டதாகத் தெரிவித்தனர். கடந்த 28ஆம் தேதி இரவு 11 மணியளவில், அண்ணாநகர் டவர் பார்க் அருகே தனது இருசக்கர வாகனம் இருப்பதை தெரிந்து கொண்ட தினேஷ் தனது நண்பர்களோடு சென்று, அந்த இளைஞரை கையும் களவுமாகப் பிடித்தார். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்குச்சென்ற அண்ணாநகர் போலீசார், அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.