தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காசி தமிழ் சங்கமம்' பாவத்தை கழுவ முடியாது என முரசொலி தாக்கு! பாஜகவின் பதிலடி என்ன? - kailasa

'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியின் பிண்ணனியில் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அறிஞர்களை புறக்கணித்துள்ள மத்திய பாஜக அரசு, நித்யானந்தாவிற்கு கூட அழைப்பு விடுத்திருக்கலாம் எனவும்; காசி தமிழ் சங்கமமா? காவி இந்துக்களின் சங்கமமா? என்பன உள்ளிட்ட கடும் விமர்சனங்களை முரசொலி உள்ளிட்ட நாளிதழ்கள் வைத்துள்ளன.

'காசி தமிழ் சங்கமம்' பாவத்தை கழுவ முடியாது என முரசொலி தாக்கு! பாஜகவின் பதிலடி என்ன?
'காசி தமிழ் சங்கமம்' பாவத்தை கழுவ முடியாது என முரசொலி தாக்கு! பாஜகவின் பதிலடி என்ன?

By

Published : Nov 22, 2022, 7:47 PM IST

சென்னை: பல நூறு ஆண்டு காலத் துரோகங்களை ஒரு மாத காலத்தில் கழுவ முடியுமா என்ன? காசியில் எத்தனை ஆண்டுகள் தமிழ் சங்கமம் நடத்தினாலும் கழுவ முடியாத பாவங்கள் செய்தது பாஜக கூட்டம் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கடுமையாக சாட்டியுள்ளது. மேலும், இந்த கூட்டத்திற்கு நித்யானந்தாவுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளது.

சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிக்கும் பாஜக: இதுகுறித்து வெளியிட்டுள்ள தலையங்கத்தில், நாடாளுமன்ற அலுவல் மொழி குறித்து ஆராய அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது. அனைத்தும் இந்தி, இந்தியைத் தவிர வேறில்லை என்று! இவர்கள்தான் காசியில் தமிழ் சங்கமம் கூட்டுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள கட்டுரையில் 2017-2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை வளர்க்க ரூ.643 கோடியை செலவு செய்திருக்கிறது பாஜக அரசு என சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழுக்கு காட்டும் தயவின் பிண்ணனி: இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஓரியா ஆகிய மொழிகளுக்கு பாஜக அரசு செலவு செய்ததை விட 29 மடங்கு அதிகம் என்பதை விளக்கும் புள்ளிவிபரங்கள். 2020 ஆம் ஆண்டு ஒன்றிய பண்பாட்டு அமைச்சரக அறிக்கை மூலமாகத் தெரிய வந்ததே எனக் கூறியுள்ளது. சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.643 கோடி. தமிழுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.23 கோடிக்கு 5 லட்சம் குறைவு! இவர்கள்தான் தமிழ் சங்கமம் நடத்துகிறார்கள், என முரசொலி கட்டுரை விமர்சனம் செய்துள்ளது.

தமிழ்நாட்டை பாஜக வசமாக்கும் யுக்தியா?:"தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேர் வெற்றி பெற்று வந்தால் போதும்' என்று அமித்ஷா கட்டளையிட்டு இருக்கிறாராம். அதற்குத் தான் இந்தப் பாடும், பாட்டும்! அதற்காக இங்கிருந்து ஆட்களை, உத்தரப்பிரதேசம் அழைத்துப்போகத் தேவையில்ல. எதற்காக காதைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இன்னமும் 'பாரத் மாதாகீ ஜே' என்பதை மாற்றத் தயாராக இல்லாதவர்கள் தமிழுக்குச் சங்கமம் நடத்துகிறார்களாம்! இதைத்தான் 'வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்! என்கிறான் பாரதி!" என விமர்சிக்கப்பட்டுள்ளது.

காசிக்கும் தமிழுக்கும் ஆன்மிகத் தொடர்பே: மேலும் காசி தமிழ் சங்கமம் குறித்து, வாட்ஸ் அப்பில் வலம் வரும் விமர்சனம்! என்ற மற்றொரு தலைப்பில் காசி தமிழ் சங்கமமா? காவி இந்துக்களின் சங்கமமா? எழுந்த கடும் விமர்சனங்கள்! காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவு என்பது ஆன்மீகம் சம்பந்தமானது தானே அன்றி, தமிழ் சம்பந்தமான தல்ல! அப்படியே தமிழுக்குச் சம்பந்தம் இருப்பதாகக் கொண்டாலும், அந்தத் தமிழ் சம்பந்தமும் ஆன்மீகம் தொடர்பானதே அன்றி வேறொன்றுமல்ல என செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஏறவிட்டு ஏணியைப் பறிக்கும் செயலே இது: "பாஜக அரசின் ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது என பாரதிய பாஷா சமிதி சொல்கிறது. ஒரே நாடு, ஒரே கல்வி என்பவர்களுக்கு ஒரே மொழி என்று சொல்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவைப்படலாம். பலி கொடுக்கும் ஆட்டைக் குளிப்பாட்டி அலங்கரித்து மாலையிட்டு வணங்கித்தான் பலி கொடுப்பார்கள். அந்த வகையில் இந்த பாஜக அரசும், "தமிழ், தமிழ்" என்று ஓவராக சீன் காட்டி அரவணைத்து தான் நம்மை அழிப்பார்கள்" என பாஜகவை கடுமையாக தாக்கியுள்ளது.

தமிழறிஞர்கள் புறக்கணிப்பும்; மத சித்தாந்தமும்: தமிழ்நாட்டு அரசையும், உண்மையான தமிழ் அறிஞர்களையும் முற்ற முழுக்க ஒதுக்கி வைத்து விட்டு தமிழுக்கு விழாவா? அறிவியல் தமிழை உண்மையான தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வுகளைப் புறக்கணித்து ஆன்மீகம் மட்டுமே தமிழ் என்பதாக மாய்மாலமா? மக்கள் வரிப்பணத்தில் மத சித்தாந்தத்தைப் பரப்ப, மொழியின் பெயரால் நடத்தப்படும் அரசியல் சித்து விளையாட்டே இந்த காசி தமிழ் சங்கமம்! இவ்வாறு வாட்ஸ் அப்பில் வலம் வரும் விமர்சனங்களால் இந்த விவகாரத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நித்யானந்தாவைக் கூட அழைத்திருக்கலாம்: அடுத்ததாக 'சிலந்தி-பதில்கள்' என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரையில் நித்யானந்தாவை ஏன் இந்தச் சங்கமத்துக்கு அழைக்காமல் விட்டார்கள் என்பது புரியவில்லை. ஓர் அழைப்பு அனுப்பியிருந்தால் மறுநிமிடமே புஷ்பக விமானத்தை சிருஷ்டித்து அதிலே பறந்து வந்திருப்பாரே. அவரை ஏன் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை என கேலியாக விமர்சித்துள்ளது முரசொலி.

மோடி-ஆளுநர் ரவி-நித்யானந்தா ஆகியோர் இணையும் புள்ளி: "அதாவது தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, மதம் சாராத நாடு இருக்க முடியாது என்று கூறியதற் கொப்ப ஒரு மதத்தை, ஆளுநர் ரவியும், பிரதமர் மோடியும் விரும்புகிறபடி நிறுவி ஒரு மதச்சார்பான நாட்டை உருவாக்கி ஆண்டு கொண்டிருப்பவர். அந்த நாட்டின் பெயரையே 'கைலாசா' என்று வைத்து தன்னை சிவனின் மறு அவதாரமாக அறிவித்து ஆட்சி புரிந்து கொண்டிருப்பவர். அந்த அற்புத அவதாரம் நித்யானந்தாவை ஏன் இந்த சங்கமத்துக்கு அழைக்காமல் விட்டார்கள் என்பது புரியவில்லை" எனக் கூறியுள்ளது.

காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப்பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி, வாரணாசியில் நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி வரும் டிச.16 ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. இதன் ஆரம்ப விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அங்கு இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அருதையற்ற முரசொலி!- அமர் பிரசாத் ரெட்டி:இதுகுறித்து, தமிழ்நாடு பாஜக இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி நம்மிடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில், "முதலில் முரசொலி ஒரு முறையான பத்திரிக்கை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது திமுகவின் பத்திரிக்கை. மேலும், காசியில் நடக்கும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பற்றி விமர்சிப்பதற்கு திமுகவிற்கு எந்தவித அருகதையும் இல்லை" எனத் தெரிவித்த அவர் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இங்கு அவர்கள் வருகை தந்ததன் மூலம் தமிழ்நாட்டையும் தமிழ் மொழிப்பற்றையும் புரிந்துகொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடும் காசியும் காலத்தால் அழியாத கலாச்சார மையங்கள் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details