சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது; 'பாஜக சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட "தாவல் திலகம்" குஷ்பூ, ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தைப் பற்றி பேசாமல் தனது வாய்த் துடுக்கைக் காண்பித்துள்ளார். நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன "தாவல் திலகம்" என்று சிலருக்கு ஐயம் ஏற்படக்கூடும்.
அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்தில் நிறைய கட்சிகளுக்குத் தாவியதால் "தாவல் திலகம்" என்ற பட்டம் அவருக்கு பொருத்தமாக இருக்குமல்லவா, அந்த "தாவல் திலகம்" தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில்
முதலமைச்சர் குறித்து பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கியுள்ளார்.
முதலமைச்சர் தேர்தல் அறிக்கையைப் படிக்கவில்லை. எழுதிக் கொடுப்பதைத் தான் அவர் படிப்பது வழக்கம் எனத் தேவையின்றி விமர்சித்து உள்ளார். மின்கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வால் வயிறு எரிகிறது எனத் துடித்துத் துவண்டுள்ளார். நடிகை குஷ்பூ பாஜகவின் தேசிய அளவில் பதவி வகிப்பவர்.
ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் ஏற்றிய போதும், பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்திக் கொண்டே இருந்த போதும், ஜி.எஸ்.டி. போன்ற ஒழுங்கு முறைப்படுத்தாத வரிவிதிப்பாலும், விண்ணை முட்டும் விலைவாசி ஏறிய போதெல்லாம் எரியாத வயிறு, ஏழைகளைப் பாதிக்காத வகையில் பால் விலையை ஏற்றி, பால் முகவர்களுக்கு விலையை உயர்த்தியுள்ளதை கண்டு எரிகிறதாம். அதன் பெயர் வயிறு எரிவதல்ல, வயிற்றெரிச்சல் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. அரசு திட்டங்கள் ஏழை எளியவர்களைப் பாதிக்காத வகையில் இருப்பதால் ஏற்பட்ட மனஅரிப்பு. மின்கட்டண உயர்வுக்குப் பிறகும் மற்ற மாநிலங்களில் உள்ளதைவிட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்பதை பலமுறையும் விளக்கியாகி விட்டது. மேலும், இப்போதுள்ள ஏற்றம் கூட ஒன்றிய அரசு தரும் அழுத்தத்தின் காரணத்தால் என்பதும் தெளிவுபடுத்துப்பட்டுவிட்டது.
பெங்களூருவில் ஒரு வீட்டில் 148 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தினால் அவர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரூ.1,395 ஆகும். பெங்களூரு உள்ளடங்கிய கர்நாடக மாநிலத்தை ஆண்டுகொண்டிருப்பது, "தாவல் திலகம்" குஷ்பூ அவர்கள் இப்போது குடியேறியிருக்கும் பாரதிய ஜனதா கட்சியாகும். அந்த அம்மையாரின் அருமைத் தலைவர் அண்ணாமலை பல ஆண்டுகாலம் வாழ்ந்த மாநிலமாகும். இந்த இரண்டு விவரம் கெட்டவர்களும் பொறுப்பு வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி அங்கே ஆண்டு கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 200 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்துபவர்கள் கட்டண உயர்வுக்குப் பிறகு செலுத்த வேண்டிய தொகை மொத்தமாகவே ரூ.225 லிருந்து ரூ.275- தான் வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கட்டண உயர்வைப் பார்த்தே, திருமதி குஷ்பூக்கு வயிறு எரிகிறது என்றால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள கட்டணத்தைப் பார்த்தால் எதெல்லாம் எரியுமோ ?...