சென்னை: அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட வேளச்சேரி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரினை வெளியேற்றும் பணியினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று(நவ-4) ஆய்வு செய்தார். தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழையும், ஒருசில சமயங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் இன்று (நவ.3) காலை முதலே சென்னையின் புறநகர் பகுதியில், மழையானது விட்டு விட்டு பெய்து வந்தது. குறிப்பாக, வேளச்சேரி பிரதான சாலையில், சிறு மழைக்கே வெள்ளம் சூழ்ந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சார்பில் தெரிவித்ததாவது, "பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.3) காலை முதல் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் குறிப்பாக காலை 9 மணி முதல் 10 மணிவரை ஆலந்தூர் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்குள் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாநகராட்சி பணியாளர்கள் தேங்கியுள்ள மழைநீரினை உடனுக்குடன் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் சாலைகள், உட்புறச் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேக்கமின்றி வடிந்து வருகிறது. இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரினை மாநகராட்சியின் ஒப்புதலின்றி சாலையில் வெளியேற்றப்பட்டது.