சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை மற்றும் இந்திய ஒலி, ஒளிபரப்பு மன்றம் இணைந்து பொது ஒலிபரப்பு சேவை நாள் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தின் துணைத்தலைவரும், அறிவியலாளருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தனி மனிதனுக்கு செய்தி கொண்டு செல்வதில் ஊடகங்களும் வானொலியும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் பள்ளிகளில் பாடம் கற்றுக்கொள்வது போல, ஊடகங்கள் மூலம் கல்விப் பயிலும் வகையில் அவை இருக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் சந்திராயன்-1 மற்றும் மங்கள்யான் குறித்து ஏற்கெனவே சேர்த்து உள்ளோம். இந்தப் பாடங்களை நடத்துவதற்கும் செயற்கைக்கோள் குறித்து எளிதில் மாணவர்களுக்குப் புரியும் வகையில் பாடம் நடத்துவதற்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவியல் மையங்களுக்குச் சென்று, செயற்கைக் கோள்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்குப் பதிலாக லேப்டாப் மூலம் செயற்கைக்கோள்களின் செயல்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.