சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது, "தமிழ்நாட்டில் மருத்துவத்துறை மாவட்ட இணை இயக்குநர்கள் மூலம், 2012ஆம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், இட ஒதுக்கீட்டையும் பின்பற்றி, 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டு, தினக்கூலி அடிப்படையில் 2500-க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் ஐந்தாண்டு கால சேவையை முடித்தவுடன், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணியில் சேர்ந்து பத்து ஆண்டுகளாகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தினக் கூலி அடிப்படையிலேயே பணி செய்து வருகின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, தமிழ்நாடு அரசு இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய திமுக எம்எல்ஏ வேலு சட்டமன்றத்தில் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அன்றைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், இந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 4 முதல் 5 மாதங்களாக அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. இந்த ஊதிய நிலுவையையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.