சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சுமார் 3 ஆயிரத்து 500 பேருந்துகள் சென்னை நகரத்திலும், புறநகர்ப் பகுதிகளிலும் இயக்கப்படுகின்றன. இதில், சாதாரண, விரைவு, சொகுசு உள்ளிட்ட மூன்று வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் சாதாரணப்பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதில்லை என்பதே பயணிகளின் புகாராக இருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக சாதாரணப்பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகிறது என்ற தகவலும், இது தேர்தலின் பின்னணியில் இயக்கப்படுகிறது என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
பெரும்பாலான சொகுசுப் பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்து வட்டாரங்களில் பேசப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்ற பொது போக்குவரத்தைக் காட்டிலும்; மாநகரப் பேருந்து போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 பேருந்துகளில், 75 முதல் 80 விழுக்காடு வரை சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட்டது என்கிறது ஒரு நம்பத்தகுந்த தகவல்.
ஆனால், சாதாரணப் பேருந்துகள் 20 விழுக்காடு வரைதான் இயக்கப்பட்டது. எனினும், 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் 50 விழுக்காடுக்கு மேல் சாதாரணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. கட்டணத்தைப் பொறுத்தமட்டில், சாதாரணப் பேருந்துகளில் குறைந்த பட்சமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் விரைவுப் பேருந்துகளில் 7 ரூபாயும், சொகுசுப் பேருந்துகளில் 11 ரூபாயாகவும் வசூலிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக சாதாரணப்பேருந்துகளில் 20 ரூபாயும், விரைவுப்பேருந்துகளில் 30 ரூபாயும், சொகுசுப் பேருந்துகளில் 41 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. எனவே, பயணிகளை மகிழ்விக்கும் வகையிலும் தேர்தலை குறி வைத்தும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என ஒரு சில போக்குவரத்து அலுவலர்கள் ஒப்புக்கொண்டனர். இது தினமும் வேலைக்குச் செல்கின்ற லட்சக்கணக்கான பயணிகளைக் குறி வைத்து இயக்கப்படுகிறது.
இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சீட்டு பரிசோதகர் கூறியதாவது, "சில பயணிகள் பயணக் கட்டணம் குறைவாக இருப்பதால், சாதாரண பேருந்துகளை அதிக அளவில் விரும்புகின்றனர். கடந்த ஆண்டுகளில் சாதாரணப் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டதால், பயணிகள் சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்து அதிக கட்டணத்தை கொடுத்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குப்போக நிர்பந்தப்பட்டார்கள்.