சென்னை:ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஜனவரி 9ஆம் தேதியான இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில், நேற்று (ஜன.8) மீண்டும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்களிம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக நிதித் துறையுடன் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும் என்றும், ஆகையால் ஜன.10ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் அனைத்து கோரிக்கையையும் ஒரே நாளில் எட்டிவிட முடியாது, இது தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முதலே வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது. இந்நிலையில், சென்னையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை மாநகரில் அனைத்து பேருந்துகளும் இயங்குவதாக எம்டிசி மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.