சென்னை: மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அளித்த தொகுப்பூதிய காலிப் பணியிடங்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்குனரகத்தில் உள்ள தொகுப்பூதிய செவிலியர் காலிப் பணியிடங்களுக்கும் மட்டுமே தற்பொழுது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் சண்முகக்கணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்தக் கலந்தாய்வில் காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக எம்ஆர்பி செவிலியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் சுபின் கூறும்போது; "தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணியிட மாற்ற கலந்தாய்வு 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதை வரவேற்கிறோம். இது ஒரு நீண்ட நாள் கோரிக்கையாகும். எனினும் பணியிட மாற்ற கலந்தாய்வில் வெளிப்படை தன்மை இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
கலந்தாய்வில் ஏற்கனவே இருந்த காலி பணியிடங்கள் பட்டியலில் காண்பிக்கபடாமல் ஒரு சில இடங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 80 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், வெறும் 2 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் 27 காலி பணியிடங்களுக்கு 6 பணியிடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 பணியிடங்களுக்கு 9 பணியிடங்களும், தருமபுரி மாவட்டத்தில் 56 பணியிடங்களுக்கு 16 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளன. இது போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இதே போன்ற நிலை தான் பின்பற்றப்பட்டுள்ளது.