கோட்டையை முற்றுகையிட முயன்ற எம்ஆர்பி செவிலியர்கள் கைது MRB Nurses: சென்னை:கரோனா தொற்றுக் காலத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதிப் பணிக்கு காத்திருந்த செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களை டிசம்பர் 31ஆம் தேதியுடன் பணியில் இருந்து நீக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்தது.
மேலும், மாவட்ட சுகாதாரத் திட்டத்தின் மூலம் பணியில் சேர்ப்பதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 1ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்தால் கோட்டை நோக்கிப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் எழும்பூரில் இருந்து தொடங்கினர். அப்போது தங்களின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோட்டை நோக்கி பேரணி சென்ற எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். இரவீந்திரநாத், எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தின் சுபின், உதயக்குமார், வீரராகவன், விஜயலட்சுமி, ராஜேஷ் உள்ளிட்ட செவிலியர்கள், சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
’கடந்த 2019ஆம் ஆண்டு MRB தேர்வில் மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் கரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் 2020ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு எங்களுக்கு, முன்பும் மற்றும் பின்பும் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாக அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
ஆனால், கோவிட் காலத்தில் பணியமர்த்தப்பட்ட எங்களை கோவிட் முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என தொடர்ந்து பணிநீட்டிப்பு செய்து 2 வருடங்கள் 7 மாதங்களாகப் பணிபுரிந்து வந்துள்ளோம். கடந்த 6 மாதங்களாக மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.
கடந்த 2021ஆம் ஆண்டு மாவட்ட சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் நலத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் விளைவாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முன்னிலையில், நடந்த மூன்று கட்டப் பேச்சுவார்த்தையின் போதும் ஒப்பந்த செவிலியர்களாக பணி அமர்த்த உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், கடந்த டிச.30 2022ஆம் தேதி இரவு 8 மணியளவில் கோவிட் எம்ஆர்பி தேர்வில் தகுதிப் பெற்ற 2400 செவிலியர்களை பணியிலிருந்து விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்கள் 7 மாதங்களாக உயிரையும் துச்சம் என்று கருதி, எங்கள் குடும்பங்களை விட்டு வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த தங்களது வாழ்வாதாரம் பாதித்துள்ளது. எனவே, தங்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என பாதிக்கப்பட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:CCTV: பலி வாங்க காத்திருக்கும் பள்ளம் - பதற வைக்கும் காட்சி