சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 2.85 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க அளிக்கப்பட்ட சம்மனை ஏற்று சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது வழக்கறிஞருடன் இன்று (அக்.25) ஆஜரானார்.
இந்த விசாரணையில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அலுவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும்எம்.ஆர்.விஜயபாஸ்கர் முறையான பதில் அளித்து வருகிறார். தேவைப்பட்டால் ஆவணங்களை அளிக்க தயாராக உள்ளார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அவரது தந்தை காலத்திலிருந்து சாயத் தொழிற்சாலை உள்ளிட்ட ஐந்தாறு நிறுவனங்கள் உள்ளன. அவர் அனைத்துக்கும் வருமான வரி செலுத்தி ஆவணங்களை முறையாக வைத்துள்ளார். இந்த விசாரணை முற்றிலும் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டே நடைபெறுகிறது.
வழக்கறிஞர் செல்வம் பேட்டி டெண்டர் முறைகேடு தொடர்பாக அலுவலர்கள் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. இந்த விசாரணையில் அலுவலர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் அடுத்தகட்டமாக சட்ட ரீதியில் சந்திக்கவும் தயார்" என்றார்.
இதையும் படிங்க:தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின - நடிகர் விஜய்