மதுரை: ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டுமே பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்க அட்டவனை வெளியிடப்பட்டது. இது குறித்து மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சிகள் இந்தியில் மட்டும் நடத்த அறிவிக்கப்பட்டு, கடந்த இருபத்தி ஒன்றாம் தேதியில் இருந்து நடைபெற்று வந்தது. இதை விமர்சித்து இந்தி பேசாத மாநில ஊழியர்கள் வசதிக்காக அவரவர் தாய்மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இணையவழி பயிற்சி தனியாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். அதுவரை இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இப்பயிற்சிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று இப்போது 25ஆம் தேதியில் இருந்து ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்க ரயில்வே நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன் நகல் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது. 21ஆம் தேதி இந்தியில் நடந்த பாடத்தை 25ஆம் தேதி ஆங்கிலத்தில் நடத்திட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நவம்பர் இரண்டாம் தேதி வரை பயிற்சி அளிக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலையில் இந்தி பேசுபவர்களுக்கு இந்தியிலும், மாலையில் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும் வகுப்பு நடைபெறும். இது இந்தி பேசாத மாநில ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்தப் பிரச்சினையை என் கவனத்திற்கு கொண்டு வந்த ரயில்வே மருத்துவ ஊழியர்களையும், டி ஆர் இ யூ (DREU) தொழிற்சங்கத் தோழர்களையும் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் பயிற்சிகளை அவரவர் தாய் மொழியிலும் நடத்த வேண்டும் என்கிற என் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்கப்படும் - சேகர்பாபு