சென்னை: பாலின சமத்துவத்துக்கு எதிரான, ஸ்டேட் வங்கியின், கருவுற்ற மகளிருக்கு பணி நியமனம் மறுப்பு என்ற உத்தரவு திரும்ப பெறப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு, மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “ஸ்டேட் வங்கி 31.12.2021 அன்று பணி நியமனங்கள் குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அதிர்ச்சி தருகிறது. நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புகளின், மாதர் இயக்கங்களின், தொழிற் சங்கங்களின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது.
ஸ்டேட் வங்கி 2,50,000 ஊழியர்களை கொண்டது. அதில் 62,000 மகளிர் ஊழியர்களை கொண்ட பெரிய அரசு வங்கி. வங்கித் துறையில் இவ்வளவு அதிகமாக வேலை வாய்ப்புத் தரும் வங்கி கிடையாது. ஆனால் இவ்வளவு பெரிய வங்கி பாலின நிகர் நிலைப் பார்வையில் இவ்வளவு சுருங்கி இருப்பது வேதனை அளிக்கிறது.
பணி நியமனம்
மகளிர் கருவுற்ற காலத்தில் பணி நியமனத் தேர்வு பட்டியலில் இடம் பெற்று இருந்தாலும் அவர்கள் கருவுற்ற காலத்தில் 3 மாதங்களை எட்டி இருந்தால் அவர்களுக்கு பணி நியமனம் தரப்படாது. கருவுற்ற பெண்கள் "தற்காலிகமாக தகுதி அற்றவர்கள்", "பிரசவத்திற்கு பின்னர் 4 மாதம் கழித்து பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள்" என ஸ்டேட் வங்கி கூறுவதற்கு என்ன அர்த்தம்.
பெண்கள் 3 மாத கருவுற்ற காலத்தைக் கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் வங்கி பணி நியமனத்திற்கான தேர்ச்சியை பெற்றிருந்தாலும் குறைந்த பட்சம் 7 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது அநீதி.
இது உளவியல் ரீதியாக பெண்களை பாதிக்காதா. அதுவும் கருவுற்ற காலத்தில் அமைதியான மன நிலையை உறுதி செய்ய வேண்டியது முக்கியமில்லையா. சிலருக்கு உடனடி வேலை வாய்ப்பு என்பது அவர்களின் வாழ்க்கையை நகர்த்துவதற்கான முக்கியத் தேவை என்ற நிலை இருக்கலாம். அரசு நிறுவனங்கள் எனில் "மாதிரி பணி அமர்த்துபவர்" (Model Employer) ஆக இருக்க வேண்டாமா.
சட்டத்தை மீறிய வங்கி
கருவுற்ற பெண்கள் வந்தால் பேருந்தில் கூட எழுந்து நின்று இடம் தருகிற பண்பாடு கொண்ட இந்தியச் சமுகத்தில் அவர்களுக்கான இடத்தைப் பறிக்கிற ஸ்டேட் வங்கியின் நிர்வாகத்தை என்ன சொல்வது. இது அப்பட்டமான, புரையோடி சீழ் பிடித்த பெண்ணடிமைத்தன சிந்தனையின் வெளிப்பாடு.
இந்திய அரசியல் சாசன பிரிவுகள் 14,15,16 உறுதி செய்கிற சமத்துவத்திற்கு விரோதமானது. வேலை வாய்ப்பில் பாலின பாரபட்சம் கூடாது என்கிற 16 (2) பிரிவை அப்பட்டமாக மீறுவது.
பெண்கள் உங்களிடம் அனுதாபத்தை யாசிக்கவில்லை. உரிமைகளை கேட்கிறார்கள். பெண்களின் உரிமைகள் எல்லாம் நீண்ட நெடிய போராட்டங்கள் வாயிலாக சமூக சீர்திருத்த இயக்கங்களால், மாதர் அமைப்புகளால் ஈட்டப்பட்டவை. நவீன சமூகத்தின் சமத்துவ சிந்தனைகளை, பாலின நிகர் நிலைப் பார்வையை உள் வாங்கி ஒரு அரசு நிறுவனமே செயல்படவில்லை என்றால் தனியார் துறையில் பெண்களின் நிலை என்னவாகும்.
ஸ்டேட் வங்கியின் சுற்றறிக்கை திரும்ப பெறப்பட வேண்டும், கருவுற்ற மகளிருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களையப்பட வேண்டும் என இன்று நிதியமைச்சர் நிர்மலாவுக்கும் ஸ்டேட் வங்கி தலைவருக்கும் கடிதங்களை எழுதியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை ஜாதி ரீதியான கலவரம்:கள ஆய்வு வெளியீடு