சென்னை:குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்பதைத் தவிர்ப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசு நாளில் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மேதகு ஆளுநர் அவர்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம். அதேவேளையில், அவ்விருந்தில் பங்கேற்பதைத் தவிர்ப்பது என முடிவு செய்திருக்கிறோம்! அத்துடன், தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
கடந்த பொங்கல் நாளில் ஆளுநர் அவர்கள் அனுப்பிய அழைப்பில் தமிழ்நாடு என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டதோடு தமிழ்நாடு அரசின் இலச்சினையும் அகற்றப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் கண்டனக் குரல் எழுப்பினர். தமிழ்நாடு அரசின் சார்பில் ஆளுநரின் நடவடிக்கை குறித்து குடியரசுத் தலைவருக்கும் புகார் அளிக்கப்பட்டது . அதன் பின்னர் ஆளுநர் இந்திய ஒன்றிய அரசால் அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், தற்போதைய குடியரசு தின நாளில் தேநீர் விருந்து நிகழ்வுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்னும் பெயரை பயன்படுத்தியிருப்பதோடு கோபுர இலச்சினையும் அச்சிடப்பட்டுள்ளது. அத்துடன், தமிழகம் தமிழ்நாடு என்பது குறித்து தான் தெரிவித்த கருத்தைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்றும் ஆளுநர் அண்மையில் தன்னிலை விளக்கமும் அளித்திருக்கிறார்.