சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது மகனின் பிரிவால் வாடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில்,'சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக மேற்குவங்கம் சென்றபோது ஏற்பட்ட சிறு விபத்தால் தோழர் யெச்சூரிக்கு முதுக்குத் தண்டில் அடிபட்டது.
அதற்காகத் தொடர்ந்து சிகிச்சைபெற்று ஓய்வில் இருக்க வேண்டியது அவசியமாகியது. ஆனால் அகில இந்தியப் பொதுச்செயலாளர் என்ற முறையில் ஐந்து மாநில சட்டப்பேரவை பணிகளுக்காகத் தொடர் பயணத்தில் இருக்க வேண்டிய தேவையிருந்தது. ஒரு வார ஓய்வுக்குப்பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்.
அதற்குள்ளாக தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், சேலம் ஆகிய இடங்களில் பரப்புரையை முடித்து, சென்னைக்கு வந்து கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தினூடேயே பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுவந்தார்.
கூட்டம் முடிந்தது சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற விமானப் பயணத்தில் தோழர் செச்சூரியுடன் நானும் சென்றேன். அவர் தன்னுடைய உடைமைகளையே தூக்க இயலாமல் சிரமப்பட்ட அவருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்தேன்.
விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கிய போது அந்த அதிர்வால் முதுகுத்தண்டில் ஏற்படும் வலிதாங்க முடியாமல் துடித்துப் போனார். வலிபொறுக்க முடியாமல் அவரையும் மீறி முனகலோசை வெளிவந்துகொண்டே இருந்தது.
நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முதுகுவலிப் பிரச்சனை கொண்டவன். யெச்சூரியின் அந்த முனகல் ஓசை எனது உடம்புக்குள் வலியாகவே பரவிக்கொண்டிருந்தது. முழுப்பயணத்திலும் நரகவேதனையை அனுபவித்த அவருடன் எதுவும் செய்ய முடியாமல் அருகில் இருந்தேன். இதை எழுதும்போதும் கண்களில் நீர்பெருகுகிறது.
இடதுசாரிகள் உதவிகளை செய்ய மாட்டீர்களே இப்போது எப்படி என கேள்வி எழுப்ப அவரின் உடல்நிலையை விளக்கினேன். அப்போது, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இந்தத் தியாகந்தான் தன்னலமற்ற தலைவர்களாக கம்யூனிஸ்டுகளை என்றைக்கும் வணங்க வைக்கிறது எனக் கூறினார்.
ஆனால், நம்மை வசீகரித்த, நம்மை ஆட்கொண்ட தலைவர்களின் கண்களில் நீர்பெருகுவதைப் பார்க்கக் கிடைக்காதவனே பாக்கியவான். நான் அந்தப் பாக்கியமற்றவன். பின்னர் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் உடல்நலமில்லாதவரை பரப்புரைக்கு அழைத்ததற்காக அதிருப்தியை வெளிப்படுத்தினேன்.
ஆனால், 15 நாட்களுக்குள்ளாக அவரது மூத்த மகன் உதவியுடன் திண்டுக்கலில் பரப்புரை மேற்கொள்ள வந்துவிட்டார். ஆனால் இன்று(ஏப்.22) காலை வந்த செய்தி நிலைகுலைய வைத்துவிட்டது. டெல்லியில் கரோனா சிக்கிச்சையில் இருந்த அவரது மூத்த மகன் ஆசிஷ் இறந்துவிட்டார்.
தன் மகனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி சொல்லிப்பதிவிட்டிருக்கிறார் யெச்சூரி. அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறேன். முதுகிலும் இதயத்திலும் ஆரா ரணம் இருந்தாலும் கடந்து பயணிப்பீர்கள் தோழர்.
உங்களிடம் நாங்கள் கற்றது அதனைத்தான்" என தனது வலிகளையும், இரங்கல்களையும் பதிவிட்டுள்ளார்.