சென்னை:இந்தியா கூட்டணியின் சார்பில் வருகின்ற 14-ஆம் தேதி மகளிர் மாநாடு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்விற்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் வகையிலும், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பற்றிப் பேசுவதற்கும், நாட்டில் பெண்களுக்கு இருக்கக்கூடிய நிலைகளைக் குறித்துப் பேசுவதற்காகவும் வருகின்ற அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி, இந்திய கூட்டணியில் இருக்கக்கூடிய முக்கியமான பெண் தலைவர்கள் இந்த மாநாட்டிலே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு பெண் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மகளிர் உரிமை மாநாடு என்பதால் பெண் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்கள். இதில் முதலமைச்சர் மட்டும் கலந்து கொள்வார்.
இந்தியா கூட்டணி பொருத்தவரை முதலமைச்சர் அவர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் இங்கு முதன்முதலாக நடைபெறுகிறது. எனவே, நிச்சயமாக மிகப் பெரிய கவனத்தைப் பெறக்கூடிய கூட்டமாக இருக்கும். பாஜக, இந்தியா என்ற பெயரை பாரத் என்று கூறிவரும் சூழ்நிலைகளில், அவர்கள் இது போன்ற பல முயற்சிகளைச் செய்து கொண்டிருப்பதன் மூலம், மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.