தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீமானையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வலியுறுத்தும் ஜோதிமணி - முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து போராட்ட மேடையில் அவதூறாகப் பேசியதாக சாட்டை துரைமுருகனை மட்டும் கைதுசெய்தால் போதாது சீமானையும் கைதுசெய்ய வேண்டும் என எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

jothimani
jothimani

By

Published : Oct 11, 2021, 12:17 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதைக் கண்டித்து நேற்று (அக். 10) அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், பேசிய யூ-ட்யூபர் சாட்டை துரைமுருகன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், அரசு குறித்தும் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு சாட்டை துரைமுருகன் திருநெல்வேலி வழியாகச் சென்றபோது, நள்ளிரவில் மாநகர காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.

பின்னர், திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் சாட்டை துரைமுருகனை முறைப்படி தக்கலை காவலர்களிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, தக்கலை காவலர்கள், அவரை பத்மநாபுரம் நீதித் துறை நடுவர் (Judicial Magistratre) தீனதயாளன், முன்பு முன்னிறுத்தினர்.

இதையடுத்து, வரும் 25ஆம் தேதிவரை சிறைக் காவலில் வைக்க நீதித் துறை நடுவர் உத்தரவிட்டார். இதனால், சாட்டை துரைமுருகன் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்படுகிறார்.

இது குறித்து மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "நாம் தமிழரின் இந்தப் பேச்சு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் வரக்கூடிய குற்றம். தமிழ்நாட்டின் அமைதியும், அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் நாசமாகிவிடும்.

தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில் ஒருதுளிகூட சமரசம் செய்துகொள்ளக் கூடாது. தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீமான் ஒரு பாஜக அடிவருடி. பாஜக இம்மாதியான பயங்கரமான குற்றச்செயல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றும் என்கிற தைரியத்தில்தான் இப்படிப் பேசுகிறார்கள். இதற்குத் தமிழ் மண்ணில் நாம் இடம்தரக் கூடாது.

சீமான் இந்த மேடையில் இருந்திருக்கிறார். அவருடைய தூண்டுதல், வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இந்தப் பயங்கரவாத பேச்சு நடந்திருக்க முடியும். ஆகவே சீமானையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும். இதற்கு முன்பு இதே சட்டத்தின்கீழ் இப்படி கைது நடந்திருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: சாட்டை துரைமுருகன் கைது

ABOUT THE AUTHOR

...view details