ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு: வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை - சிபிசிஐடி போலீசார் விசாரணை
சென்னை: பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீது உள்ள நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை குரோம்பேட்டை பகுதியில் திமுக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த நிலம் தொடர்பான நில அபகரிப்பு வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலம் தொடர்பான வழக்கு நவம்பர் 4ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.
இது தொடர்பாக சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர்கள் கண்ணன், சத்யசீலன், குணவர்மன் தலைமையில் சிபிசிஐடி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட காவலர்கள் இன்று (அக். 27) பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர், வருவாய்த் துறையினரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இவற்றில் நிலம் தொடர்பான தாஸ்வேஜூகள் நிலம் பெயர் மாற்றம், பட்டா மாறுதல் செய்யப்பட்டது குறித்து வருவாய்த் துறையினர் பதிவேடுகளை ஆய்வு செய்துவருகிறார்கள்.
வருவாய்ப் பதிவேடுகள் குறித்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ரவி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது.