சென்னை: முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமானவர் தயாநிதி மாறன். இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.99,999 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் சுருட்டியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தயாநிதி மாறன் அளித்துள்ள புகாரில், தானும், தனது மனைவியும் கூட்டு வங்கி கணக்கு (joint account) வைத்துள்ளோம். இந்த நிலையில் தனது மலேசியாவில் இருக்கும் மனைவியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சில மர்ம நபர்கள் ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி விவரங்கள் மற்றும் ஏடிஎம் கார்டு எண்களை கேட்டுள்ளனர்.
ஆனால், அதற்கு தன் மனைவி விவரங்களை தர மறுத்த நிலையில் தங்கள் வங்கி கணக்கில் இருந்து சுமார் 99,999 ரூபாயை சைபர் மோசடி கும்பல் திருடி உள்ளனர். தனது மனைவியின் தொலைபேசி எண்ணுக்கு மூன்று முறை தொடர்பு கொண்டு OTP மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்களை மர்ம நபர்கள் கேட்ட நிலையில், தனது மனைவி அதை தெரிவிக்காத நிலையிலும் தனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டு இருப்பது தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தனது வங்கி கணக்கில் பணத்தை திருடிய சைபர் மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்கும் படி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து எம்பி தயாநிதி மாறன் அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “ஞாயிற்றுக்கிழமை எனது ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து IDFC First Bank-Billdesk வாயிலாக அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் மீறி ரூ.99,999 திருடப்பட்டுள்ளது.
அந்த பரிமாற்றத்திற்கு ஓடிபி எண் ஆனது கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு வரவில்லை. ஆனால் என் மனைவியின் எண்ணை மோசடிக்காரர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். செல்போனில் பேசிய மர்ம நபர்கள் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்தனர். ஆனாவல் அவர்களின் முகப்பு படத்தில் சிபிஐசி (Central Board of Excise and Customs) லோகோ இருந்ததால் நான் சந்தேகமடைந்து, எனது வங்கி கணக்கின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தினேன்.
ஆனாலும், மர்மநபர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை எளிதாக மீறினார்கள் என்பது எனக்கு புதிராக உள்ளது. வங்கிக்கும் இந்த மோசடி எப்படி நடந்தது எனத் தெரியவில்லை. பணப்பறிமாற்றம் நடைபெற எனது எண்ணில் இருந்து ஓடிபி பெறப்படாதற்கான காரணத்தையும் அவர்களால் கூறமுடியவில்லை.
தொழில்நுட்பம் குறித்து அறிந்தவர், தனிப்பட்ட தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பவருக்கே இப்படி நிகழலாம் என்றால், முதல் முறையாக டிஜிட்டல் பரிமாற்றத்தை பயன்படுத்தும் பயனர்கள், மூத்த குடிமக்களின் நிலை என்ன? கடந்த காலங்களில் நான் எம்.பி என்ற முறையில் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சகத்திடம் சைபர் கிரைமினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி கோரி கடிதம் எழுதினேன். ஆனால் இப்பொழுது நான் எனக்கான நீதியைக் கோருகிறேன்.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2023 வரை இந்தியாவில் நடந்த சைபர் கிரைம்களில் 75% நிதி மோசடிக்கானவை என செய்திகள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டிலேயே ஆதார் தகவ்ல்கள் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. வங்கிகளில் தரவுகள் வெளியாவது சாதரான செய்திகள் ஆகிவிட்டன.
டிஜிட்டல் உலகில் இந்தியா சிறந்து விளங்கவும், நிதித்துறையில் தொழில்நுட்ப மையமாக நாம் மாறுவதற்கும் இன்னும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை. மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க அரசு என்னநடவடிக்கை எடுத்துள்ளது. நிதியமைச்சகம் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமா? எங்களுக்கு பதில்கள் வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக எம்.பி ஆ.ராசாவின் 15 பினாமி நிறுவன சொத்துக்களை கையகப்படுத்திய அமலாக்கத்துறை!