கரோனா மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிப்பது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் தொற்றை சித்த மருத்துவத்தின் மூலம் ஐந்து நாள்களில் நலமாக்கி சாதனை படைத்து இருப்பதாகவும், கரோனா மையங்களை தங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தால் குறுகிய காலத்தில் நோயாளிகளை குணப்படுத்திக் காட்டுவதாகவும் சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது அரசு பரிசீலிக்கப்பட வேண்டிய யோசனையாகத் தோன்றுகிறது.
தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சித்த மருத்துவத்தில் ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 160 பேரை ஐந்து நாள்களில் நலமாக்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்திருக்கிறார்.
சித்த மருத்துவ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் மொத்தம் மூன்று வகையான சித்த மருந்துக் கலவைகளை உருவாக்கி இருப்பதாகவும், அவற்றை கரோனா தடுப்பு மருந்தாகவும், கரோனாவை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அம்மருந்துகளை பயன்படுத்தியதில் இரு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 160 பேர், புழல் சிறையில் பாதிக்கப்பட்டிருந்த 23 கைதிகள் இதுவரை இல்லாத வகையில் ஐந்து நாட்களில் குணமடைந்துள்ளனர். இது ஒரு மருத்துவ அதிசயம் என்றால் மிகையில்லை.
கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா நோய்க்கு தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம் கண்டுபிடித்துள்ள சிகிச்சை முறை நிரூபிக்கப்பட்டது என்பதால் அதைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான மக்களை விரைவாக குணப்படுத்த வேண்டும்.