சென்னை: சாலிகிராமம் பகுதியை சேர்ந்த தீபக் நேற்று முன்தினம் இரவு பணி நிமித்தமாக ராயப்பேட்டைக்கு சென்று விட்டு பின்னர் காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை வழியாக வரும் போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேனாம்பேட்டை சட்ட ஒழுங்கு எஸ்.ஐ இளங்கோவன் தலைமையிலான காவலர்கள் தீபக்கை மடக்கி அவர் மது அருந்தியுள்ளாரா என ப்ரித் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
அதில் தீபக் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. உடனே தீபக் தனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும், உங்களுடைய கருவியில் கோளாறு உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அபராதம் கட்ட வேண்டும் என வற்புறுத்தியதால் தீபக் தன்னை மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என கேட்டார். அதன் பேரில், போலீசார் மற்றொரு கருவியில் சோதனை செய்ததில் தீபக் மது அருந்தவில்லை என்பது உறுதியானது.
பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை காவல்துறை இது குறித்த சுற்றிக்கை ஒன்றை அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
அதில் சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் தினசரி வாகனத் தணிக்கை மேற்கொண்டு, மது போதையில் வாகனம் ஓட்டுவர்களை ப்ரீத் அனலைசர் கருவி மூலம் வாகன ஓட்டிகளிடம் சோதனைகள் மேற்கொண்டு, மது போதையில் வாகனம் ஓட்டியவர்களை கண்டுபிடித்து, வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இச்சோதனையின் போது இக்கருவியில் 30mg/100mlக்கு மேல் அளவீடு காண்பிக்கும் வாகன ஓட்டிகள் மீது மது போதையில் வாகனம் ஒட்டியதாக வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து அவர்கள் ஓட்டி வந்த வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தாமாக விபத்து ஏற்படுத்திக் கொள்ளாமலும், மற்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திடாமலும், தடுக்கப்பட்டு மனித உயிர்களும் உடல் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
30mg/100ml என்ற அளவீடுக்கு குறைவாக காண்பிப்பவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை.
ஆகவே காவல்துறையின் சோதனையின் போது வாகன ஓட்டிகளுக்கு 30mg/100mlக்கு மேற்பட்ட அளவீடு காண்பித்தால், வாகன ஓட்டிகள் மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யுமாறு கேட்கும் பட்சத்தில் காவல் துறையினர் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நகைக்கடை ஊழியர்களைத் தாக்கி 3 கிலோ தங்க நகைகள் கொள்ளை? - போலீஸ் தீவிர விசாரணை