சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அண்மைக் காலமாக காலை நேரத்தில் வெயிலும், மாலை நேரத்தில் மழையும், மாறி மாறி பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து இரண்டு நாள்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்-27) அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை 5 மணியளவில் இருந்து கனமழை பெய்தது.
சென்னையின் முக்கிய பகுதிகளான, வடபழனி, ஈக்காட்டுதாங்கல், கிண்டி, நந்தனம், சேப்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கனமழையானது பெய்தது. இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயில், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. மேலும், அண்ணா நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னையில் காலை முதலே வெயில் தாக்கம் அதிகாமக இருந்தாலும், தமிழ்நாடு கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும், பருவ மழை தொடங்க இருப்பதால், காற்றி திசை மாறி உள்ளது. மேற்குத் திசையில் மேகங்கள் நகருவதால், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளிலும இனி வரும் நாள்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
போக்குவரத்து நெரிசல்: சென்னையில் இடைவிடாமல் பெய்ததால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் அனைவரும் மழையில் சிக்கிக்கொண்டனர். இதனால் சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலை, உள் வட்டச்சாலை, ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடைவிடாத மழை காரணமாக சாலையில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில், இடியுடன் கனமழைக்கு வாய்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:19 நாட்களுக்குப் பிறகு கூடங்குளம் அணுமின் நிலைய கடல் பகுதியில் சிக்கிய நீராவி உற்பத்திக் கலனில் ஒன்று மீட்பு!