சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பொதுமக்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போக்குவரத்து தொடர்பாக புகார் தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக 2062 புகார்களை சரி செய்து இருக்கிறோம் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை சமூக வலைதளங்களில் ட்விட்டரில் 69 ஆயிரத்து 162 பொதுமக்கள் பின் தொடர்வதாகவும், அதேபோன்று முகநூலில் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் பின் தொடர்வதாகவும், இன்ஸ்டாகிராம் பகுதியிலும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதத்தில் 1267 புகார்கள் வந்துள்ளதாகவும், இதில் 90 சதவீதம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சாலைகளில் பொதுமக்கள் ஒரு வழிபாதையில் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, மற்றும் வாகனத்தை அதிவேகமாக ஓட்டிவது மூலமாக இயக்குவது என போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், பொதுமக்களே வீடியோ மூலமாக புகார்கள் தெரிவிக்கலாம். அதன்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் கூறினார்.
குறிப்பாக போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்களின் வாகன எண், நடைபெறும் இடம் மற்றும் காலம் ஆகியவற்றோடு கூடிய புகைப்படம் மற்றும் வீடியோவோடு புகார் அளிக்குமாறு கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கும் வசதியை பழிவாங்கும் செயலுக்கு பயன்படுத்திக் கொண்டால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என எச்சரித்துள்ளார். மேலும், சென்னை காவல்துறையின் நடவடிக்கையை அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்கள் பதிவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து பல்வேறு சிறப்பு தணிக்கைகள் செய்து போக்குவரத்து விதிமுறைகளை கட்டுப்படுத்தி வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதியில் அந்தப் பகுதிக்குட்பட்ட போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.