தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Mother's day: "அம்மாவை கைவிடக் கூடாது" - இளைஞர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்! - RN Ravi

இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய தாயை கைவிடக் கூடாது என ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அன்னையர் தின விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

அம்மாவை கைவிடக் கூடாது - ஆளுநர் ஆர்.என்.ரவி
அம்மாவை கைவிடக் கூடாது - ஆளுநர் ஆர்.என்.ரவி

By

Published : May 14, 2023, 2:26 PM IST

சென்னை: அன்னையர் தினம் இன்று (மே 14) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் அன்னையர் தின விழா நடைபெற்றது. இதில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவியும் பங்கேற்றார்.

இதனையடுத்து செஸ் வீரர் பிரக்ஞானந்தா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஈரோடு மகேஷ், பாரா ஒலிம்பிக் வீரர் பொன்ராஜ், மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் சுஜித்குமார் மற்றும் இளம் வயது அரசியல் தலைவர் சசிகுமார் உள்ளிட்டோரின் தாயாருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநரின் மனைவி லட்சுமி, “அனைத்து மகளிருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். அன்னையர் தியாகம் செய்வதாக கூறுகின்றனர். ஆனால், அன்னை என்பவர் தன் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் வளர்ச்சிக்காக உழைப்பதை மகிழ்ச்சியாகவே காண்கின்றனர்” என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “அன்னையர்கள் வருகையால் ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற ஒரு இடமாக மாறி உள்ளது. அன்னையர்கள் வருகையால் ஆசீர்வதிக்கபட்ட இடமாக மாறி உள்ளது. ஆளுநர் மாளிகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று இருந்தாலும், இந்த நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. தாய் இல்லாமல் நாம் யாரும் இல்லை.

மொழி, கலாச்சாரம் கடந்து உலகம் முழுவதும் உள்ள அன்னையர் அனைவரும் ஒன்றே. மனிதனிடம் உள்ள உணர்வுகள் தாய் மூலம் மட்டுமே கிடைக்கின்றன. அந்த தாய் படித்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனிதனிடம் உள்ள அன்பு குணங்கள் தாய் மூலம் மட்டுமே வருகின்றன. நான் பராசக்தி கடவுளை வணங்கும் ஒருவர்.

நான் கண்களை மூடும் நேரத்தில் பராசக்தி உருவத்தில் என் தாயைப் பார்க்கிறேன். வளர்ந்து வரும் உலகில் தற்போது உள்ள இளைஞர்கள் பெற்றோர்களை விட்டுவிட்டு வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். தாயின் அன்பு அவர் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். ‘அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே’ என்ற அழகான பாடலை இளையராஜா இசை அமைத்து உள்ளார்.

அந்தப் பாடலில் உள்ள அர்த்தம் அனைத்தும் உண்மை. நாம் எங்கு இருந்தாலும் நம் அம்மாவை கைவிடக் கூடாது. தற்போது உள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். தங்களுடைய தாய், தந்தையை தனியாக விட்டுச் செல்கின்றனர். ஒரு சிலர் தங்கள் பெற்றோர்களை கைவிடுகின்றனர். ஒருபோதும் தங்களுடைய தாயை யாரும் கைவிடக் கூடாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"செவிலியர்கள் பணி விவகாரத்தில் 'விரக்தியை நோக்கி' செல்கிறது திமுக" - ஓபிஎஸ் விளாசல்!

ABOUT THE AUTHOR

...view details