சென்னை: அண்ணாசாலை பெருமாள் முதலி தெருவைச் சேர்ந்தவர் ஷோபா (31). இவர் 2014ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தினேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். திருமணத்திற்குப் பிறகு ஷோபா வண்ணாரப்பேட்டையில் கணவருடன் வசித்துவந்தார்.
இவர்களுக்கு நான்கு வயதில் கீர்த்திக் என்ற ஆண் குழந்தை இருந்து. நான்கு வயதாகியும் குழந்தையால் வாய் பேச முடியவில்லை. பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வந்தனர். இருப்பினும் இதனால் எந்தப் பயணம் ஏற்படவில்லை.
குழந்தை வாய் பேச முடியாமல் போனதால் மன உளைச்சலில் இருந்த ஷோபாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஷோபாவும் மனநல வல்லுநர்களிடம் சிகிச்சைப் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 20) தினேஷ் தனது மனைவி, குழந்தையை அண்ணா சாலையிலுள்ள மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றார்.
இரவு பணிமுடிந்து வீட்டிற்கு வந்த தினேஷ் படுக்கையறை கதவு உள்பக்கம் பூட்டி இருந்ததால் கதவைத் தட்டினார். கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த தினேஷ் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது ஷோபா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டும், குழந்தை கீர்த்திக் மெத்தையில் இறந்த நிலையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சாலை காவல் துறையினர், இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், குழந்தை கீர்த்திக் நான்கு வயதாகியும் வாய் பேச முடியாததால் மனநலம் பாதிக்கப்பட்ட ஷோபா குழந்தையைக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து கணவர் தினேஷிடம் காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:கிளப்ஹவுஸில் பெண்களுக்கு எதிராக ஆபாச பேச்சு - மூவர் கைது