சென்னை:சென்னை திருவல்லிக்கேணி பழைய கட்டத் தொட்டி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சித்ரா மற்றும் ஏழுமலை தம்பதியினர். இவர்களுக்கு சுபிக்ஷா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் பார்மசி சார்ந்த பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். சித்ரா மெடிக்கல் ஒன்றில் கணக்காளராகவும், அவரது கணவர் ஏழுமலை ஆட்டோ ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் இரண்டு மகளும் பார்மசி சார்ந்த பட்டப் படிப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் தனது இரண்டு மகள்களுக்கும் புதிய ஆடைகள் எடுப்பதற்காக சித்ரா தனது இரண்டு மகள்களுடன் தி.நகர் பகுதிக்குச் சென்று உள்ளனர். ஆடைகள் எடுத்துவிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது வீட்டுக்கு செல்வதற்காக மூவரும் தி.நகரில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வந்து, பின் வேளச்சேரி மார்க்கம் செல்லும் பறக்கும் ரயிலில் ஏறுவதற்கு அடுத்த பிளாட்ஃபார்ம் நோக்கி சென்று உள்ளனர்.
சரியாக 5.30 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை தனது இரண்டு மகளுடன் சித்ரா கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது. தண்டவாளத்தில் ரயில் வருவதனைக் கவனிக்காமல் மகள்கள் சென்றதை சித்ரா கவனித்து பதறிபோயுள்ளார். தனது உயிரை பற்றி சற்றும் கவலைக்கொள்ளாமல் தண்டவாளத்தில் ஓடிச் சென்று அவரது இரு மகள்களையும் தண்டவாளத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டு உள்ளார் தாய் சித்ரா.
இதில் மகள்கள் இருவரும் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்து விழுந்து உள்ளனர். இரண்டு மகள்களும் ரயிலில் அடிபடாமல் நூலிழையில் தப்பித்த நிலையில் தாய் சித்ரா ரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த எழும்பூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு உடற் கூராய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது இரண்டு மகள்களின் உயிரை காப்பாற்ற தனது உயிரை தாய் ஒருவர் தியாகம் செய்திருக்கும் சம்பவமானது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.