சென்னை:விரைவில்பருவமழையானது தொடங்க உள்ளது. தேங்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன் குனியா போன்ற நோய்கள் அதிக அளவு பரவும் வாய்ப்பு உள்ளது. இதற்காக சென்னை மாநகரட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொசுக்களால் நோய்த்தொற்று: சென்னையில் கடந்த வாரத்தின் சில நாட்களில் மழை பெய்தது. வரும் நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழையானது தொடங்க உள்ளது. இந்த மழைக் காலத்தில், கொசுப்புழுக்களின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக கொசுக்களால் ஏற்படும் நோய்களான டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களும் அதிகளவு பரவ வாய்ப்பு உள்ளது.
டெங்குவால் சிறுவன் பலி:மதுரவாயல், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த 4 வயது சிறுவனான ரக்ஷன். இந்தச் சிறுவனுக்கு டெங்கு நோய் தொற்று இருப்பது உறுதியானப் பின், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக செப்டம்பர் 6 ஆம் தேதி அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.
மக்களிடையே பீதி:இதனைத் தொடர்ந்து, மதுரவாயல் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்தப் பகுதியில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை ஒட்டிச் சென்றனர். இந்த சம்பவம் சென்னை மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மழைக்காலம் தொடங்கியதை அடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, டெங்குவிற்கு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கபடுமா? என்பது மக்களின் கேள்வியாக இருந்து வருகிறது.
கொசு ஒழிப்பு பணி:இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, “சென்னை மாநகரில் உள்ள பகுதிகள் செக்டார் வகையில் பிரிக்கப்பட்டு, ஒவ்வொறு வார்டுகளாக களப்பணியாளர்கள் சென்று, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொசுப் புழுக்கள் அழிப்பு:மேலும், சென்னையில் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன் குனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுகளை அழிப்பதற்காக கொசு மருந்து தெளிக்கும் பணியில் 1000க்கும் மேற்பட்ட பணியாளர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சென்னையின் முக்கிய நீர்நிலைகளிலும், குளம், ஏரி போன்ற இடங்களிலும் கொசுப் புழுக்களை உண்ணும் கம்பூஃசியா என்னும் மீன்கள் விடப்பட்டு கொசுப் புழுக்களை அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி மருத்துவ நிலைக்குழு தலைவர் ஜி.சாந்த குமாரி கூறியதாவது, “சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில், டெங்கு கொசு மட்டுமின்றி டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசுக்களை அழிப்பதற்காக சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
நடவடிக்கைகள் தீவிரம்: மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், 200 வார்டுகளாகவும் இதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதே போல், ஒவ்வொரு வார்டுகளிலும், செக்டார் அடிப்படையில் கொசு மருந்தானது தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 300க்கும் மேற்பட்ட கைத்தெளிப்பான்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட அதிவேக திறன் கொண்ட கைத்தெளிப்பான்களைக் கொண்டு குடிசைப் பகுதிகள், பள்ளிகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளித்து வருகிறோம்.
முக்கியமாக சென்னையில் உள்ள நீர்நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி மழைநீர் வடிகாலில் உள்ள இடங்களில் கூட, கொசு புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் 15 மண்டலத்தில் உள்ள களப்பணியாளர்களிடையே, ஒவ்வொரு வீடு வீடாக சென்று, தண்ணீர் தேங்கி இருக்கிறதா? மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டி சரியாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறதா? என்று சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னையில் கட்டுமானங்கள் நடைபெற்று வரும் இடங்களிலும், தண்ணீர் தேங்கும் நிகழ்வுகள் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளோம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:வண்டலூர் பூங்காவில் கட்டணம் உயர்வு.. "ரூ.200-க்கு அப்படி ஒன்னும் இல்லை" சுற்றுலா பயணிகள் ஆதங்கம்.. ஈடிவி பாரத் சிறப்பு தொகுப்பு!