தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ’மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு, வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டமானது, அனைவருக்கும் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் உள்ள 50 ஊரக வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டது.
மேலும் மூன்று மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி) தலா ஒரு மண்டலத்திலுள்ள 106 பகுதிகளைச் சேர்ந்த சுகாதார நிலையங்களிலும், 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக தமிழ்நாடு மகளிர் கழக மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 1,264 பெண் சுகாதாரத் தன்னார்வலர்களும், 50 இயன்முறை மருத்துவர்களும், 50 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்களும், இல்லம் தேடி வரும் இச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டம், படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தின் பிற கிராமப்பகுதிகளில் 385 வட்டாரங்களிலுள்ள 8,713 துணை சுகாதார நிலையங்கள் வழியாக மக்களைச் சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும்.