சென்னை:கோவை மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் திருவேங்கடம். இவர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், அரசு ஒப்பந்தம் தருவதாக கூறி தன்னிடம் ரூ.1.25 கோடியை பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் தராவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை திருப்பி கேட்டதற்கு எஸ்.பி. வேலுமணியும், அவரது உதவியாளர்களும் தனது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தாகவும் குறிப்பிட்டிருந்த அவர், முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவருடைய உதவியாளர் பார்த்திபன், வினோத் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
ரூ. 1.25 கோடி மோசடி!
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழியிடம் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் ரூ. 30 கோடி மதிப்பிலான சாலை ஒப்பந்தம் பெறுவதற்காக 1.20 கோடி ரூபாய் கொடுத்தேன். அவர் தெரிவித்தன் அடிப்படையில் அவருடைய உதவியாளரிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தவுடன் அந்த ஒப்பந்தங்களை அந்தந்தப் பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களுக்கு சாதகமான ஒப்பந்ததர்களுக்கு கொடுத்துவிட்டனர். எனக்கு டெண்டர் ஒதுக்காமல் காலம் தாழ்த்திய நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
அப்போது, பணத்தை திரும்பப் பெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனாலும், பணத்தை திரும்பப் பெறமுடியவில்லை. திமுக ஆட்சி வந்ததும் பணத்தை கேட்டபோது, எஸ்.பி. வேலுமணியின் உதவியாளர்கள் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஆதாரங்கள்
எஸ்.பி. வேலுமணியும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வேண்டும். நான் இழந்த பணத்தை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். என்னைப்போல் பணத்தை இழந்த பலர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் நிற்கின்றனர்.
எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆடியோ, குறுஞ்செய்தி ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதிமுக ஆட்சியின்போது கமிஷன் இல்லாமல் எந்த ஒப்பந்தமும் நடைபெறாது. நான் கொடுத்த பணம் எஸ்.பி. வேலுமணியிடம் மாட்டிக் கொண்டதால் அடுத்த கட்டமாக எந்த ஒப்பந்தமும் செய்யமுடியாமல் உள்ளேன்" எனக் கூறினார்.
மேலும், "தன்னை யார் என்றே தெரியாது என எஸ்.பி. வேலுமணி தெரிவிக்கமுடியாது. அதிமுகவுக்கு நான்கு கார்களை என் பெயரில் டெலிவரி எடுத்துள்ளேன். அதற்கான இன்ஸுரன்ஸையும் நான்தான் கட்டியுள்ளேன். கொங்கு மண்டலத்தில் செல்வாக்காக இருந்த முன்னாள் எம்எல்ஏ கிணத்துக்கடவு தாமோதரன் பெயரை கட்சிக்குள் கெடுக்கும் வகையில், என்னை வைத்து சில காரியங்களை எஸ்.பி. வேலுமணி சாதித்துக்கொண்டார்" என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:அதிமுக அரசால் ரூ. 2,577 கோடி இழப்பு - நிதியமைச்சர்