சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுசெய்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' கரோனாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகள், இரவு பகலாக மேற்கொண்டதில் கரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் 178 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு 85 ஆயிரம் முதல் 90 ஆயிரம் சோதனைகள் செய்துவருகிறோம். சோதனை செய்யக்கூடிய நபர்களின் மொத்த எண்ணிக்கையில் 6.2 விழுக்காட்டினர் மட்டுமே கரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று தற்போது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்.
இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில் கட்டுக்குள் உள்ளது. தமிழ்நாட்டில் 1.6 விழுக்காட்டிலிருந்து 1.4 விழுக்காடாக இறப்பு விகிதத்தை குறைத்துள்ளோம். அதனை 1 விழுக்காடாக கொண்டுவருவதற்கு இலக்காக வைத்து செயல்படுகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு 10 விழுக்காட்டிற்கு குறைக்கப்பட்டிருக்கிறது. 120ஆக இருந்த இறப்பு விகிதம் 70ஆக குறைக்கப்பட்டிருப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 90.2 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கடந்த 8 வாரங்களில் கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் கரோனா தொற்று இரண்டு மடங்காக உயர்ந்த நிலையில், தமிழ்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயராமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு மற்றும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக 7 ஆயிரத்து 321 கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது. அதில் மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.830 கோடி, மருத்துவ உள்கட்டுமான பணிகளுக்கு ரூ.140 கோடி, 15 ஆயிரம் புதிய மருத்துவ பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.384 கோடி, கரோனா சிகிச்சைப் பணிக்கு ரூ.358.5 கோடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்குவதற்காக 3 ஆயிரத்து 169 கோடி ரூபாய், பொது விநியோக திட்டத்தில் இலவசமாக பொருள்கள் வழங்கியதற்காக ஆயிரத்து 727 கோடி ரூபாய், வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 140 கோடி ரூபாய் , ஊரக உதவி நிதியாக 300 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு மருத்துவமனையில் பரிசோதனை செய்யும்போது கரோனா நெகட்டிவ் வரும் நபர்களுக்கும் நுரையீரல் தொற்று இருப்பது தெரிகிறது. எனவேதான் கரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் நுரையீரல் தாெற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் ஆக்சிஜன் படுக்கைகள் 40 ஆயிரம் அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அளிக்கும் வகையில் தமிழ்நாடு உள்ளது.
இந்தியாவில் வேறு மாநிலங்களில் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்காமல் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மோசமாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருக்கிறது'' என்றார்.
இதையும் படிங்க:எஸ்பிபி உடல்நிலை குறித்து கமல் வருத்தம்