சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு, சென்னைவாசிகள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனால், மெட்ரோ ரயிலில் நேற்று (அக். 20) ஒருநாளில் மட்டும், 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயணம் செய்து உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 லட்சம் பேர் பயணம்: சென்னையில், மெட்ரோ ரயிலில் கடந்த இரண்டு நாட்களில் (அக்.19, 20) மட்டும் 7 லட்சத்து 4 ஆயிரத்து 665 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி 3 லட்சத்து 43 ஆயிரத்து 922 பயணிகளும், அக்டோபர் 20ஆம் தேதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 743 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணித்து உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான பயணிகளின் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 28 ஆயிரத்து 21 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 20 ஆயிரத்து 423 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 18 ஆயிரத்து 375 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 18 ஆயிரத்து 113 பயணிகளும் பயணம் செய்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.