தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நுழைவு வகுப்பில் 25 விழுக்காடு மாணவர் சேர்க்கைக்கு rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதிமுதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. செப். 25ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்ற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள எட்டாயிரத்து 628 நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர் என்ற விபரமும் மாவட்ட வாரியாக வெளியிடப்படும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக செப்டம்பர் 8ஆம் தேதி வரை 43 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பம் செய்த மாணவர்களின் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை இணையதளத்திலும், பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்படும். ஒரு பள்ளியில் உள்ள இடத்திற்கு அதிகமாக மாணவர்கள் விண்ணப்பித்திருந்தால் அவர்களில் காலியாக உள்ள இடத்திற்கு குலுக்கல் முறையில் அக்டோபர் 1ஆம் தேதி தேர்வுசெய்யப்படுவார்கள்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் அக்டோபர் 3ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.
இதையும் படிங்க:'அலைபேசியும் இல்ல, நெட்வொர்க்கும் இல்ல' - பழங்குடியின குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகும் ஆன்லைன் கல்வி!