சென்னை:தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்காவிடினும், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களது பலத்தை நிரூபிக்க அனைத்து வழிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாய்ப்பினை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பலர் முன்வருகின்றனர்.
இதனால், பலர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக யூகிக்கப்படும் கட்சிகளில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார் ராஜீவ் காந்தி. அவருக்கு திமுகவில் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, கட்சிப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வரும் அவர், இன்று நாம் தமிழர் கட்சியில் தனக்கு ஆதரவாக இருந்த சுமார் 350 பேரை அக்கட்சியிலிருந்து விலக்கி, திமுகவில் இணைத்துள்ளார்.