சென்னை:கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று (அக்.10) ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 32 ஆயிரத்து 17 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 5.03 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அரசு மூலம் 4.78 கோடி டோஸ் தடுப்பூசியும், தனியார் மூலம் 25.70 லட்சம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
46.08 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று மதியம் வரவுள்ளன.
கரோனா இன்னும் ஒழியவில்லை
கரோனா தொற்று இன்னும் ஒழியவில்லை, கரோனா தொற்றைத் தடுக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உயிரிழந்தவர்களில் 96% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 4% பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.