சென்னை: நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு திரைப் பிரபலங்களும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில், கண்டம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.
மேலும், அச்சம்பவம் குறித்து பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டியும் அளித்து இருந்தார். அந்த பேட்டி சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது. அதற்கு பலதரப்பட்ட மக்களும் தங்களின் விமர்சனக் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.
அதில் ஒருவர், மணிப்பூரில் பெண்கள் மீது நடந்த வன்கொடுமையின் போது குஷ்பு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், தற்போது நடிகை த்ரிஷாவுக்காக குரல் கொடுப்பதெல்லாம் அரசியல் லாபத்திற்கான செயல் என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், அப்பதிவைக் குறிப்பிட்டு நடிகை குஷ்பு தனது X சமூக வலைத்தள பக்கத்தில், "ஒரு பெண்ணை இழிவுபடுத்த இந்த வார்த்தைகள் தான் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. என்னால் உங்கள் சேரி மொழியைப் பேச முடியாது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்" என்று பதிவிட்டு இருந்தார்.
அதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் சேரி மொழி என குறிப்பிட்டு இருந்ததற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், எக்ஸ் தளத்தில் குஷ்புவின் இந்த பதிவு, பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல கட்சியினரும் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என குஷ்பு முத்திரை குத்துகிறார் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதைத் தொடர்ந்து, நடிகை குஷ்பு மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் குஷ்பூ இதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டினை முற்றுகையிடப் போவதாகவும் காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
குஷ்புவின் வீட்டில் வேறு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாதவாறு இந்த பாதுகாப்பு நடவடிக்கை அளிக்கப்பட்டு இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:கோவையில் தொடரும் ராகிங் பிரச்சினை! ஜூனியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சீனியர்கள் உள்பட 3 பேர் கைது!