சென்னை:தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துச் செல்வார்கள். அப்போது பெருமளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது, தலைநகர் சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவும், முடிந்த வரையில் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொல்லாமல் இருப்பதற்குப் போக்குவரத்துத் துறை சார்பாகச் சென்னையில் உள்ள முக்கியமான 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது மாதவரம், கேகே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 பகுதிகளிலிருந்தும் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த 9 முதல் 11 தேதி வரை தலைநகரிலிருந்து செல்லவும், 13 முதல் 15 வரை பல்வேறு மாவட்டங்களிலிருந்து தலைநகருக்குத் திரும்பவும் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் பொதுமக்கள் சிரமம் இன்றி பயணிக்க முன்பதிவு மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.