சென்னை:கடந்த 2014ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி அமலாக்கத்துறையிடம் புகார் ஒன்றை அளித்தது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் தெரிவித்தது. குறிப்பாக 2007 மற்றும் 2011, 2012 ஆகிய காலகட்டங்களில் பங்குகள் முறைகேடாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளனர்.
ரூ.100 கோடி அபராதம்:இந்த விவகாரத்தில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் மும்பை ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநருமான எம்ஜிஎம் மாறன் என்கிற நேசமணி மாறன் முத்து உடந்தையாக இருந்ததாகவும் ரிசர்வ் வங்கி புகார் அளித்தது.
இதனடிப்படையில் அமலாக்கத்துறை ரூ.608 கோடி அளவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பங்குகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்கூறி, ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை செய்ததில் ஃபெமா FEMA எனப்படும் வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேலாண்மைச்சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி ரூ.100 கோடியும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ரூ.17 கோடியும் அபராதம் விதித்துள்ளது.
'அபராதத்தைச் செலுத்தத் தவறினால் சொத்துகள் முடக்கம்':தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன், சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வங்கியில் வைத்துக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதால், ரூ.35 கோடி அபராதத்தை அமலாக்கத்துறை அவருக்கு விதித்தது. குறிப்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தை மீறி பங்குகளை ஒதுக்கியது உறுதியானதால், இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டனர். அபராதத் தொகை செலுத்த தவறினால் அடுத்தகட்டமாக சொத்துகளை முடக்கும் நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கை பாயும் என அமலாக்கத்துறை எச்சரித்தது.